Home நாடு “சீ பீல்ட்: வேதமூர்த்தி விலக வேண்டுமென்றால், காற்பந்தில் மலேசியா தோற்றதற்கு சைட் சாதிக் விலக வேண்டும்”

“சீ பீல்ட்: வேதமூர்த்தி விலக வேண்டுமென்றால், காற்பந்தில் மலேசியா தோற்றதற்கு சைட் சாதிக் விலக வேண்டும்”

1045
0
SHARE
Ad

கோலாலம்பூர் – சீ பீல்ட் ஆலய விவகாரத்திற்காக அமைச்சர் பதவியிலிருந்து வேதமூர்த்தி விலக வேண்டும் என அறைகூவல் விடுப்பது சிறுபிள்ளைத்தனமானது என்று சாடியிருக்கும் ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் ராம் கர்ப்பால் சிங், “இது எப்படியிருக்கிறது என்றால், சீ பீல்ட் விவகாரத்திற்கு வேதமூர்த்தி மீது பழி போடுவது என்பது அண்மையில் சுசுகி ஏஎப்எப் கிண்ண காற்பந்து இறுதிப் போட்டியில் மலேசியா தோல்வியுற்றதற்கு விளையாட்டுத் துறை அமைச்சர் சைட் சாதிக் அப்துல் ரஹ்மான்தான் காரணம் என பழிபோடுவதற்கு ஒப்பாகும்” என்றும் கூறியிருக்கிறார்.

அமைச்சரவையின் முடிவுகள் என்பது கூட்டு முடிவாகும். எனவே, ஒவ்வொரு அமைச்சு முடிவுக்கும் ஒட்டுமொத்த அமைச்சரவை உறுப்பினர்களும் பொறுப்பாகும். அதை விடுத்து ஓர் அமைச்சர் மற்றொரு சக அமைச்சரைப் பதவி விலகச் சொல்வது என்பது காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் அமைச்சரவையின் கூட்டு முடிவு பாரம்பரியத்திற்கு எதிரானதாகும் எனவும் ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான ராம் கர்ப்பால் தெரிவித்தார்.

“ஓர் அமைச்சர் என்ற முறையில் வேதமூர்த்தி சீ பீல்ட் ஆலய விவகாரத்தில் எடுத்த முடிவுகளைக் குறை சொல்லலாம். பொதுமக்கள் மத்தியில் விவாதிக்கலாம். ஆனால் இன்னொரு சக அமைச்சர் பகிரங்கமாக அவரை பதவியில் இருந்து விலகச் சொல்வது முற்றிலும் வேறுபட்ட இன்னொரு விவகாரமாகும்” என்றும் ராம் கர்ப்பால் விளக்கினார்.

அப்படியே வேதமூர்த்தியைக் கண்டிக்கும் அறைகூவல் விடுக்கப்பட வேண்டுமென்றால் அது பிரதமரிடம் இருந்துதான் வரவேண்டுமே ஒழிய, இன்னொரு அமைச்சரிடமிருந்து வரக் கூடாது என்றும் கூறிய ராம் கர்ப்பால் இதுபோன்று அமைச்சர்களிடம் இருந்து வெளிப்படும் குமுறல்கள், அரசாங்கத்தின் ஒற்றுமையற்ற தன்மையை எடுத்துக் காட்டுவதாகவே அமையும் என்றும் இதனால் அரசாங்கத்தின் மீதான நம்பகத்தன்மை குறையும் என்றும் சாடினார்.

#TamilSchoolmychoice

இதுபோன்ற பகிரங்கமான பதவி விலகல் அறைகூவல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் இதனால் புதிதாகத் தோற்றுவிக்கப்பட்டிருக்கும் நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தின் வளர்ச்சி மீதும், நம்பகத் தன்மை மீதும் பாதிப்பு ஏற்படும் என்றும் ராம் கர்ப்பால் எச்சரித்தார்.