Home கலை உலகம் திரைவிமர்சனம்: “கனா” – தன்னம்பிக்கை ஊற்றெடுக்கும் – காலத்துக்கு தேவையான படைப்பு

திரைவிமர்சனம்: “கனா” – தன்னம்பிக்கை ஊற்றெடுக்கும் – காலத்துக்கு தேவையான படைப்பு

987
0
SHARE
Ad

கோலாலம்பூர் – திரையுலகில் நுழைந்து குறைந்த காலத்திற்குள்ளாகவே உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக மின்னத் தொடங்கியிருக்கும் சிவகார்த்திகேயன், நடித்து மட்டும் கோடிகளைக் குவிக்க எண்ணாமல், தன் ஆருயிர் நண்பரான அருண் காமராஜின் திரைப்பட இயக்கத் தாகத்தைத் தீர்த்து வைத்து – அவருக்கு புதிய நுழைவாயிலைத் திறந்து வைக்கும் நோக்கில் தயாரித்திருக்கும் படம் ‘கனா’.

அதிலும், வணிக ரீதியான படத்தை எடுத்து இலாபத்தை மட்டும் குறிவைக்காமல், இலட்சக்கணக்கான இளைய சமுதாயத்தினர் தங்களின் கனவுகளை நனவாக்க நடத்தி வரும் போராட்டங்களின் வார்ப்பாக, கிரிக்கெட் உலகில் சாதிக்க நினைக்கும் சாதாரண பின்தங்கிய கிராமப் பெண் ஒருவரின் பயணத்தை திரைவடிவமாக்க முன்வந்திருக்கும் சிவகார்த்திகேயனின் துணிச்சலும், நல்ல நோக்கமும் பாராட்டுக்குரியது.

வலுவான திரைக்கதை

படத்தில் நம்மைக் கவரும் முக்கிய அம்சம் வலுவான திரைக்கதை. வெறுமனே ஒரு பெண் கிரிக்கெட் வீராங்கனையாக ஆசைப்பட்டாள் என்று தொடங்கி எடுத்திருக்க வேண்டிய படத்தை, கிராமப் புறப் பின்னணியில் திரைக்கதையை அமைத்து, அந்தச் சாதாரண பெண், தனது கனவுகளை அடைய, சுற்றுச் சூழல்களிலிருந்தும், சொந்தக்குடும்பத்திலிருந்தும் எத்தகைய எதிர்ப்புகளை, கண்டனங்களை எதிர்கொள்கிறார் என்பதையும் அவற்றை எப்படிக் கடந்து சாதிக்கிறார் என்பதையும் காட்டியிருக்கிறார்கள்.

#TamilSchoolmychoice

நாயகி கௌசல்யா பாத்திரத்தில் கனகச்சிதமாகப் பொருந்துகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். அவரது உடல்வாகும், நிறமும், கிராமத்து கிரிக்கெட் வீராங்கனையின் கதாபாத்திரத்தை அப்படியே இயல்பாகப் பிரதிபலிக்கிறது.

படத்தைத் தூக்கிப் பிடிக்கும் இன்னொரு கதாபாத்திரம் முருகேசனாக வரும் சத்யராஜ். கிரிக்கெட் வெறியராகத் தொடக்கக் காட்சிகளில் வருபவர் போகப் போக விவசாயிகள் அனுபவிக்கும் கொடுமைகளையும் சந்திக்கும் சோதனைகளையும் கண்முன்னே நிறுத்துகிறேன். அவற்றுக்கிடையிலும் மகளின் கனவுகளை நிறைவேற்றப் போராகிறார்.

கிரிக்கெட் போன்ற விளையாட்டுத்துறைகளில் மட்டுமின்றி மற்ற எந்தத் துறையிலும் கனவுகளோடு சாதிக்கத் துடிக்கும் யாரையும் இந்தப் படத்தோடு பொருத்திப் பார்க்க முடியும். அவ்வளவு நேர்த்தியான திரைக்கதை மற்றும் வசனங்கள்.

கௌசல்யாவுக்கு எதிராகப் பேசுபவர்களே – நடந்து கொள்பவர்களே ஒரு காலகட்டத்தில் அவருக்குத் துணையாக நிற்பதும் ஆதரவுக் குரல் கொடுப்பதும்,அதற்கேற்ற சம்பவப் பின்னணிகளும் திரைக்கதைக்கு கூடுதல் வலு சேர்க்கிறது.

அதைவிட முக்கியமாக, படம் முழுக்க ஒரு பெண் கிரிக்கெட்டில் சாதிக்க நினைக்கும் போராட்டத்தைக் காட்டிக் கொண்டே, விவசாயியான அவளது தந்தை வாழ்க்கையில் எதிர்நோக்கும் கஷ்டங்களையும், சோதனைகளையும் இணைத்து திரைக்கதை பயணம் செய்வது வித்தியாசமான முயற்சி.

விவசாயிகளின் போராட்டங்களை, நெகிழ்ச்சியான கண்ணீர் வரவழைக்கும் தருணங்களை, அவர்களின் சோகங்களை இதற்கு முன் இப்படி ஒரு படம் இந்த அளவுக்குத் தாக்கம் ஏற்படுத்தும் வகையில் வெளிவந்திருக்குமா என்பது சந்தேகமே!

படத்தில் நெஞ்சைக் கனக்க வைக்கும் காட்சிகளுக்கிடையில் கிராமத்து சிறுசுகள் – பெரிசுகளின் அலம்பல்களையும், கலாட்டாக்களையும், நகைச்சுவை ததும்ப இயல்பான முறையில் காட்சிப்படுத்தியிருப்பதில் இயக்குநரின் உழைப்பும், கவனமும் தென்படுகிறது.

சிவகார்த்திகேயனின் மகள் ஆர்த்தி ‘கனா’ படத்தில் தன் மழலைக் குரலில் ஒரு பாடலையும் பாடியிருக்கிறார்…

குறிப்பாக கிரிக்கெட்டுக்காக ஊரே இரண்டு பட்டு, அவர்களுடன் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் முனீஸ்காந்த் இராமதாஸ் நடத்தும் கலகலப்பு விசாரணைகள், கிராமத்து சிறுசுகள் இடையே நடக்கும் உரையாடல்கள் படத்தை கலகலப்பாக வைத்திருக்க உதவுகின்றன.

பயிற்சியாளராக சிவகார்த்திகேயன்

நாயகிக்குக் இந்தியக் குழுவில் இடம் கிடைக்க அங்கு நடக்கும் வடநாட்டு-தென்னாட்டு உரசல்கள், மோதல்கள் எதிர்பார்த்த ஒன்றுதான். இருந்தாலும் நெல்சன் திலீப்குமார் என்ற பயிற்சியாளராக சிவகார்த்திகேயன் உள்ளே நுழைந்ததும் திரைக்கதை இன்னொரு தளத்திற்கு எகிறுகிறது.

கௌசல்யாவைத் திட்ட வேண்டிய இடத்தில் திட்டி, உற்சாகமும் தன்னம்பிக்கையும் ஊட்ட வேண்டிய இடத்தில் ஊட்டி, அவரை வெற்றியாளராக உருமாற்றுகிறார் சிவகார்த்திகேயன்.

படத்தின் இறுதிக் காட்சிவரை, கௌசல்யாவின் கிரிக்கெட் போராட்டத்தோடு, விவசாயிகளைப் பிரதிநிதிக்கும் அவரது தந்தையின் விவசாயப் போராட்டத்தையும் ஒருங்கிணைத்துக் கதையைக் கொண்டு சென்றிருப்பது சிறப்பு.

படத்தை இதுவரைப் பார்க்காதவர்கள் தங்களின் பதின்ம வயதுப் பிள்ளைகளையும் அழைத்துச் சென்று பாருங்கள். போராட்டத்தின் வலியை அவர்களும் உணர்வார்கள்.

இன்றைய இளம் மாணவ சமுதாயத்தினரின் சிந்தனையையும், பாதையையும், எண்ண ஓட்டத்தையும் மாற்றியமைக்கும் முக்கியப் படமாக ‘கனா’ கண்டிப்பாக இருக்கும்.

-இரா.முத்தரசன்