கோலாலம்பூர்: ஊராட்சி மன்ற உறுப்பினர்களின் நியமனம் ஓரிடத்தில் உள்ள இனங்களின் விகிதாச்சாரத்தைக் கருத்தில் கொண்டு செயல் படுத்தலாம் என மஇகா கட்சியின் உதவித் தலைவர் முருகையா கூறினார்.
பாஸ் கட்சியின் தலைவர் டத்தோஶ்ரீ ஹாஜி அடி அவாங் உள்ளூர் தேர்தல்கள் நடைபெற்றால், குறிப்பிட்ட ஓர் இனம் மேலாதிக்கம் செலுத்துவதாக இருக்கும் என்று கருத்துரைத்ததற்கு, தீர்வாக இது இருக்கலாம் என அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே, வீடமைப்பு மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர், சுராய்டா காமாருடின், பிற நாட்டின் ஊராட்சி தேர்தல் நடைமுறைகளை உதாரணமாகக் கொண்டு, அதனை மீளாய்வுச் செய்து நமது நாட்டின் நடைமுறைக்கு ஏற்ப எவ்வாறு செயல் படுத்தலாம் என ஆராய்ந்த பின்பு செயல்படுத்தப்படும் என்றார்.
கடந்த ஜூலை மாதம், தனது அமைச்சகம் உள்ளூராட்சித் தேர்தல்களை 3 ஆண்டுகளுக்குள் நடத்த விரும்புவதாகவும், நாட்டின் நிதி மற்றும் பொருளாதார நிலையும், அதற்கு வழி கொடுத்தால் மட்டுமே இது சாத்தியம் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
எனினும், பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட், ஊராட்சி தேர்தல்கள், நகர்ப்புற மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் இன மற்றும் கருத்து வேறுபாடுகளை உண்டாக்கிவிடும் என்று கூறி அதனை செயல்படுத்த முடியாது என அறிவித்தார்.