சென்னை – திருப்பரங்குன்றம் மற்றும் 20 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்களை நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக எதிர்பார்த்து தமிழக மக்கள் காத்திருக்க முதல் கட்டமாக கலைஞர் கருணாநிதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருவாரூர் தொகுதிக்கு மட்டும் இடைத் தேர்தலை அறிவித்திருக்கிறது தமிழகத் தேர்தல் ஆணையம்.
இப்போது அனைவரும் ஆவலுடன் காத்திருப்பது ஸ்டாலினின் சகோதரரான மு.க.அழகிரி என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பதுதான். கடந்த சில மாதங்களாக அமைதி காத்து வரும் அழகிரி அவரே அதிரடியாக திருவாரூரில் போட்டியிடுவார் என்றும் அல்லது அவரது மகன் துரை தயாநிதி களமிறக்கப்படுவார் என்றும் ஆரூடங்கள் கூறப்படுகின்றன.
அழகிரி பாஜகவில் சேருவார் என்ற ஆரூடமும் கடந்த சில நாட்களாக உலவி வருகின்றது.
எந்த முடிவாக இருந்தாலும், அழகிரி மீண்டும் அரசியல் பிரவேசம் செய்வதாக இருந்தால் திருவாரூரே சரியான நுழைவாயிலாக இருக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். திமுக நிறுத்தும் எந்த ஒரு வேட்பாளருக்கும் இருக்கும் செல்வாக்கும் ஆதரவும், அழகிரிக்கும் அவரது சொந்தக் குடும்ப ஊரான திருவாரூரில் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.
அதைத் தவிர்த்து வேறு ஒரு சட்டமன்றத் தொகுதி இதுபோன்று அழகிரிக்கு அமைய வாய்ப்பில்லை.
கடந்த செப்டம்பரில் சென்னையில் கலைஞரை நினைவு கூரும் பேரணி ஒன்றை நடத்திவிட்டு அதன்பிறகு அமைதியாகிவிட்ட அழகிரி அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு திருவாரூர் இடைத் தேர்தலில் திருப்பம் எதனையும் ஏற்படுத்துவாரா?
கமல்ஹாசன் நிலைப்பாடு என்ன?
நாடாளுமன்றத் தேர்தல்களிலோ, இடைத் தேர்தல்களிலோ போட்டியிடப் போவதில்லை என்று கூறிவிட்டு ரஜினிகாந்த் அமெரிக்கா சென்று விட, தற்போது சிக்கலில் மாட்டிக் கொண்டு தவிப்பவர் கமல்ஹாசன்.
திருவாரூர் இடைத் தேர்தல் கமலின் அரசியலுக்கு ஒரு சவாலாக வந்து அமைந்துள்ளது. ஒரு வேட்பாளரை நிறுத்திப் போட்டியில் குதிப்பாரா அல்லது ஏதாவது காரணம் சொல்லி ஒதுங்கிக் கொள்வாரா?
அப்படிச் செய்தால், அவர் இதுவரை பேசி வந்த அவரது கட்சியின் அரசியல் செல்வாக்கு சரியும் என்பதோடு, இப்போது போட்டியிடாமல் பின்னர் எப்போது தேர்தல்களில் அவரது கட்சி போட்டியிடும் என்ற கேள்வியும் எழும். எனவே, கமலும் ஒரு வேட்பாளரை நிறுத்தி திருவாரூர் இடைத் தேர்தலில் போட்டியிட்டால், அந்த இடைத் தேர்தலில் அனல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.
-செல்லியல் தொகுப்பு