கோலாலம்பூர் – துன் மகாதீர் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு பிரதமர் பதவியை வகிப்பார் என எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு மத்தியில், நேற்று புதன்கிழமை மகாதீரைச் சந்தித்து சுமார் ஒரு மணிநேரம் பேச்சு வார்த்தைகள் நடத்திய டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், அதுகுறித்துப் பேசியபோது, சிங்கப்பூருடனான பிரச்சனைகளில் மகாதீருக்கும் தனக்குமான வியூகங்கள் ஒரே மாதிரியானவை என்று கூறினார்.
மேலும் நாட்டின் பொருளாதாரம் குறித்துத்தான் தங்களின் கவனக் குவிப்பு இருப்பதாகக் கூறிய அன்வார், குறிப்பாக வறுமை ஒழிப்பு, மக்களுக்கிடையில் சமமில்லாத பொருளாதார சூழல் ஆகியவை குறித்து தாங்கள் இருவரும் கூடுதல் கவனம் செலுத்தப் போவதாகவும் அன்வார் தெரிவித்தார்.
அண்மையில் பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு சென்றிருந்தபோது, அந்நாட்டு அதிபர் ரோட்ரிகோ டுடெர்ட்டேயுடன் நடத்திய சந்திப்பு குறித்தும் மகாதீரிடம் விளக்கியதாக அன்வார் கூறினார்.
மேலும், அடுத்த வாரம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கவிருப்பதாகக் கூறிய அன்வார் அந்தச் சந்திப்பு குறித்தும் மகாதீரிடம், விளக்கங்கள், ஆலோசனைகள் பெற்றதாகத் தெரிவித்தார்.