கோலாலம்பூர் – பிரதமர் துன் மகாதீர் 2 ஆண்டுகளுக்கு மட்டுமே தனது பதவியில் நீடிப்பாரா அல்லது முழு 5 ஆண்டுகள் தவணைக்கும் அவரே பிரதமராக இருப்பாரா என்ற சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் இன்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மகாதீரைச் சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் பேச்சு வார்த்தை நடத்தினார்.
மகாதீருடனான தனது சந்திப்பு குறித்து அன்வார் தனது டுவிட்டர் தளத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டார்.
அன்வாருக்கு பதவியை விட்டுக் கொடுப்பேன் என மகாதீர் தொடர்ந்து கூறிவரும் வேளையில், பலரும் இது குறித்து பலவிதமான சர்ச்சைகளை எழுப்பி வருகின்றனர்.
மகாதீருடனான தனது சந்திப்பு குறித்து கருத்துரைத்த அன்வார் “மகாதீருக்கு நம்பிக்கைக் கூட்டணியின் முழு ஆதரவு வழங்கப்பட்டிருக்கிறது. அவருடனான சுமார் ஒரு மணி நேர சந்திப்பு சுமுகமாக நடந்தது. நாங்கள் ஒப்புக் கொண்ட கால அவகாசத்திற்கு ஏற்ப மகாதீர் தொடர்ந்து பிரதமராக தனது பொறுப்புகளை ஆற்றி வர அவருக்கு வாய்ப்பும், சூழலும் வழங்கப்பட வேண்டும்” என தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.