Home நாடு “வாக்குறுதிப்படி அன்வாரிடம் பிரதமர் பதவியை ஒப்படைப்பேன்” – மகாதீர்

“வாக்குறுதிப்படி அன்வாரிடம் பிரதமர் பதவியை ஒப்படைப்பேன்” – மகாதீர்

916
0
SHARE
Ad
பெர்சாத்து மாநாட்டின்போது…

புத்ரா ஜெயா – ஏற்கனவே வாக்குறுதி தந்தபடி பிகேஆர் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமிடம் பிரதமர் பதவியை ஒப்படைப்பேன் என துன் மகாதீர் இன்று மீண்டும் மறுஉறுதிப்படுத்தினார்.

“பலருக்கு பலவிதமான கருத்துகள் இருக்கலாம். ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கலாம். ஆனால் ஒரு வாக்குறுதி என்பது வாக்குறுதிதான். அதை நிறைவேற்றுவேன்” என பெர்சாத்து கட்சியின் மாநாட்டு இடைவேளையின்போது பத்திரிக்கையாளர்களிடம் மகாதீர் கூறினார்.

பெர்சாத்து கட்சியின் மாநாட்டின் விவாதங்களின்போது ஒரு பேராளர், அடுத்த 15-வது பொதுத் தேர்தல்வரை மகாதீரே பிரதமராகத் தொடர வேண்டும் என பரிந்துரை செய்திருப்பது தொடர்பில் கருத்துக் கேட்கப்பட்டபோதே மகாதீர் மேற்கண்டவாறு கூறினார்.

#TamilSchoolmychoice

14-வது பொதுத் தேர்தலின்போதும் அதற்குப் பின்னரும் சுமார் இரண்டு ஆண்டுகள் மட்டுமே பிரதமராக இருப்பேன் என்று மகாதீர் பலமுறை அறிவித்தார்.

இதற்கிடையில் மகாதீரின் மகனும் பெர்சாத்து கட்சியின் துணைத் தலைவருமான முக்ரிஸ் மகாதீர், தொடர்ந்து பிரதமராக மகாதீர் நீடிக்கும் பரிந்துரையை ஆதரிப்பதாகக் கூறியிருக்கிறார்.

“அன்வார் அடுத்த பிரதமராக வரவேண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் அனைவரும் பாடுபடுகிறோம். ஆனால் அதற்குரிய கால அவகாசம் தேவை. அரசாங்கத்தில் நாம் கொண்டு வர நினைக்கும் மாற்றங்கள் முதலில் அமலாக்கப்பட வேண்டும். தீர்க்கப்பட வேண்டிய விவகாரங்கள் முதலில் தீர்த்து வைக்கப்பட வேண்டும். அதன்பின்னரே அந்தச் சூழல் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் அமையும்” என முக்ரிஸ் கூறியிருக்கிறார்.

இதே பெர்சாத்து மாநாட்டில் உரையாற்றிய அந்தக் கட்சியின் இளைஞர் பகுதித் தலைவர் சைட் சாதிக், மகாதீர் என்ன முடிவு எடுத்தாலும் அதை இளைஞர் பகுதியினர் மதித்து ஏற்றுக் கொள்வோம் எனக் கூறியிருக்கிறார்.