சென்னை: அஸ்ட்ரோ நிறுவனம் ஏற்பாடு செய்திருக்கும், 6-வது பொங்கு தமிழ் கலைத்திருவிழா மற்றும் உலகளாவிய வர்த்தக கண்காட்சி நேற்று (வெள்ளிக்கிழமை) சென்னை, ராயப்பேட்டையில் உற்சாகமாகத் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியினை நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தொடக்கி வைத்தார்.
பொங்கல் திருவிழாவை கொண்டாட இருக்கும் தமிழ் பெருமக்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்து கொண்டு, தமிழையும், தமிழ் கலாசாரத்தையும் வளர்ப்பதில் ஒவ்வொரு தமிழரின் பங்கும் அடங்கியிருக்கிறது என கமல்ஹாசன் தமது உரையில் தெரிவித்தார்.
ஒவ்வொரு தமிழரும், தமிழ் மொழியினை, அது சார்ந்த கலாசாரத்தை உலகெங்கிலும் கொண்டு செல்வதில் தூதுவராக இயங்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
ஏழ்மையில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் பலர், கலைஞராக வேண்டும் என்ற ஆசையுடன் வாய்ப்புகளைத் தேடி அலைந்து வருகிறார்கள். அவ்வாறு, இருப்பவர்களுக்கு அதற்கான வழியினைத் தேடிக் கொடுத்து உச்சத்தில் அமர வைப்பதுதான் தமது ஆசை என கமல்ஹாசன் கூறினார்.
இந்த விழாவில் அஸ்ட்ரோ நிறுவனத்தின் இந்திய மொழிகள் திட்டத் தலைவர் டாக்டர் என்.சி.ராஜாமணி, மலேசிய நாட்டின் நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற துணை சபாநாயகர் ரவி, மற்றும் சென்னைக்கான மலேசியத் துணைத் தூதரகத்தின் தூதர் சரவணன் கார்த்திகேயனும் கலந்துகொண்டனர்.
இந்த விழா மற்றும் கண்காட்சியானது இன்று (சனிக்கிழமை) தொடங்கி நாளை ஞாயிற்றுக்கிழமை வரையிலும் நடைபெறும். இவ்விழாவில் கலை நிகழ்ச்சிகள், பாரம்பரிய விளையாட்டுகள், மேலும், கண்காட்சியில், வீட்டு பொருட்கள், அணிகலன்கள், பாரம்பரிய ஆடைகள் என இடம்பெற்றுள்ளன.