Home நாடு “தமிழ் இடைநிலைப் பள்ளியை அமைப்பதில் பின்வாங்க மாட்டோம்” – செல்லியல் நேர்காணலில் இராமசாமி (2)

“தமிழ் இடைநிலைப் பள்ளியை அமைப்பதில் பின்வாங்க மாட்டோம்” – செல்லியல் நேர்காணலில் இராமசாமி (2)

1333
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன் – (செல்லியல் இணைய ஊடகத்திற்கென அதன் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசனுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலின் இந்த இரண்டாவது பகுதியில், பினாங்கு துணை முதல்வர் இராமசாமி, நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் வாக்குறுதி அளித்த தமிழ் இடைநிலைப் பள்ளி, பினாங்கு இந்து அறவாரியத்தின் செயல்பாடுகள், மற்ற மாநிலங்களிலும், தேசிய அளவிலும் இந்து அறவாரியம் அமைப்பது போன்ற விவகாரங்களில் தனது பதில்களையும், கருத்துக்களையும் தொடர்ந்து ஆணித்தரமாக முன்வைக்கிறார்.)

“தமிழ் இடைநிலைப் பள்ளியை அமைக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறோம்…”

கேள்வி : 14-வது பொதுத் தேர்தலின்போது, எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி, இந்திய வாக்குகளை ஈர்த்த ஒரு முக்கிய அம்சம் தமிழ் இடைநிலைப் பள்ளி. இந்தப் பொதுத் தேர்தல் வாக்குறுதி இப்போது என்ன நிலைமையில் இருக்கிறது?

#TamilSchoolmychoice

பதில்: முதல் கட்டமாக அண்மையில் பினாங்கு மாநிலத்தில் தமிழ்க் கல்வி மீதான இரண்டு நாள் கருத்தரங்கம் ஒன்றை சுமார் 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும், கல்விமான்களும் கலந்து கொள்ள அதனை வெற்றிகரமாக நடத்தி முடித்தோம். அதில் தமிழ் இடைநிலைப் பள்ளிக்கென ஓர் அங்கம் ஒதுக்கி அனுபவம் வாய்ந்த கல்விமான் ஒருவர் தமிழ்ப் பள்ளி எவ்வாறு அமைக்கப்படலாம், அதன் பாடத்திட்ட உள்ளடக்கங்கள் என்னவாக இருக்க வேண்டும் போன்ற பல அம்சங்களை முன்வைத்தார். அதைத் தொடர்ந்து நடந்த விவாதங்களின் வழியும் பல கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

இவை அனைத்தையும் தொகுத்து கல்வி அமைச்சின் பார்வைக்குக் கொண்டு செல்லவிருக்கிறோம். தமிழ் இடைநிலைப் பள்ளியை அமைக்கும் எங்களின் போராட்டம் ஓயாது. அதற்கென பினாங்கு மாநிலத்தில் நிலம் உள்ளிட்ட வசதிகளை வழங்கவும் நாங்கள் முன்வந்திருக்கிறோம் என்பதும் மக்கள் அறிந்ததுதான்.

ஆனால், மத்திய அரசாங்கத்தின் ஆட்சியைக் கைப்பற்றினாலும், சில நுணுக்கமான, சிக்கல்களான பிரச்சனைகளை முன்னெடுக்க, தீர்வு காண கால அவகாசம் தேவைப்படுகிறது. இந்தியர்களின் குடியுரிமைப் பிரச்சனைகளும் இதுபோன்றதுதான்.

தமிழ் இடைநிலைப் பள்ளியை அமைப்பதிலும் இதுபோன்ற சில நிர்வாக மற்றும் சட்டச் சிக்கல்கள் இருக்கின்றன என்பதை நாம் உணர வேண்டும். அதுமட்டுமல்ல, தமிழ் இடைநிலைப் பள்ளியை அமைத்தவுடன், அதற்கான கட்டமைப்பு, மாணவர்கள் சேர்க்கை, எத்தகைய தேர்ச்சிச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும், அதன் பிறகு பல்கலைக் கழக நுழைவு, தமிழ் இடைநிலைப் பள்ளிகளில் படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு போன்ற அம்சங்களிலும் நாம் நன்கு திட்டமிட்டு செயல்பட வேண்டும்.

அதே வேளையில், தமிழ்ப்பள்ளிகள் வளரவேண்டும், அதிகமான மாணவர்கள் சேர வேண்டும் என நாம் எண்ணும் அதே நேரத்தில் தரமான தமிழ்க் கல்வியை வழங்கவும் நாங்கள் பாடுபட்டு வருகிறோம். ஏராளமான மாணவர்களைச் சேர்த்து விட்டு, அவர்களுக்குத் தரமான கல்வியை வழங்க நாம் தவறிவிட்டோமானால் மீண்டும் தோல்வியடைந்தவர்களாக ஆகிவிடுவோம்.

அதனால்தான், தமிழ் இடைநிலைப் பள்ளியை அமைக்கும் முயற்சிகளை நாம் தொடர்ந்து கொண்டிருக்கும் அதே வேளையில் தரமான தமிழ்க் கல்வி வழங்கப்படவும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்.

தமிழ் இடைநிலைப் பள்ளியை அமைப்பதில் நாங்கள் பின்வாங்க மாட்டோம். எங்களால் ஆன அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்.

இந்து அறவாரியம்: அரசாங்கத் தலைமை வழக்கறிஞரைச் சந்திக்கிறோம் – தேசிய நிலையிலான இந்து அறவாரிய மாநாடு பினாங்கில் நடைபெறும்...

கேள்வி : தேசிய நிலையிலான இந்து அறவாரியம் அமைப்பது பெரும் சர்ச்சையாக உருவாகியிருக்கிறது. உங்களின் நிலைப்பாடு என்ன?

பதில் : அறவாரியம் அமைப்பதில் முதலில் அனைவரும் ஒன்றை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். ஆலயங்களை எடுத்துக் கொள்வதோ, கையகப்படுத்திக் கொள்வதோ எங்களின் நோக்கமல்ல. அந்தக் கோயில்களுக்கு முறையான நிர்வாகத்தை வழங்குவதும், அதே வேளையில் அந்தக் கோயில்களின் சொத்துகளைப் பாதுகாப்பதும்தான் இதன் நோக்கமாகும். ஆலய நிர்வாகத்தினரின் சமய நடவடிக்கைகளில், மத வழிபாட்டு முறைகளில் தலையிடுவதும் எங்களின் நோக்கமல்ல.

உதாரணமாக, அண்மையில் கூட பினாங்கு இந்து வாரியத்தின் கீழ் இரண்டு ஆலயங்கள் இணைக்கப்பட்டன.

இந்த நல்ல திட்டத்தை இந்து சங்கம் போன்ற அமைப்புகள் ஏன் தடுக்கிறார்கள் என்பது தெரியவில்லை.

முதல்கட்டமாக, விரைவில் அரசாங்கத் தலைமை வழக்கறிஞரை (அட்டர்னி ஜெனரல்) இதுகுறித்து சந்திக்கவிருக்கிறோம். நாட்டின் சட்டரீதியான பிரச்சனைகளுக்குத் தீர்வுகள் வழங்க அவர் ஆர்வத்தோடு பாடுபடுகிறார். அனைத்துத் தரப்புகளையும் அழைத்து சீபீல்ட் ஆலய விவகாரத்தை அவர் கையாண்ட விதம் ஓர் உதாரணம்.

இரண்டாவது கட்டமாக, இந்த ஆண்டு தேசிய நிலையிலான இந்து அறவாரியம் அமைப்பது குறித்த ஒரு மாநாட்டை சம்பந்தப்பட்டவர்களை அழைத்து பினாங்கில் நடத்தி விவாதிக்கப் போகிறோம்.

மாநிலம் வாரியாக இந்து அறவாரியங்களை முதலில் அமைத்து பின்னர் தேசிய ரீதியில் அவற்றை ஒருங்கிணைப்பதே எங்களின் நோக்கம்.

ஆலயத்தின் நன்மைக்காகத்தான் – சிறந்த ஒருமுகப்படுத்தப்பட்ட, ஒழுங்குபடுத்தப்பட்ட – ஆலய நிர்வாகத்தை வழங்குவதும், ஆலய சொத்துகளை இந்திய சமுதாயத்திற்காக பாதுகாப்பதும்தான் இதன் நோக்கமே தவிர, மாறாக, ஆலயங்களைக் கையிலெடுத்துக் கொள்வதும், மதவழிபாடுகளிலும், விவகாரங்களிலும் தலையிடுவதும் எங்களின் நோக்கமல்ல என்பதையும் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்.

நம்பிக்கைக் கூட்டணிக்கென தனியாக ஓர் இந்தியத் தலைவர் தேவையா?

கேள்வி: நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தில் தற்போது நான்கு இந்திய அமைச்சர்கள் இருக்கிறார்கள். எனினும் பல இந்தியர் விவகாரங்களில் அவர்களின் குரல்கள் ஒலிப்பதில்லை. பல சமயங்களில் பினாங்கு மாநில துணை முதல்வராக இருக்கும் நீங்கள்தான் அத்தகைய விவகாரங்களில் உங்களின் வாதங்களை முன்வைத்து போராட்டக் குரல் கொடுக்கிறீர்கள். இந்த சூழ்நிலையில் நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்திற்கென ஒரு தனியான இந்தியத் தலைவர் தேவை – ஒரு பிரதிநிதித்துவப் பேச்சாளர் தேவை – எனக் கருதுகிறீர்களா?

பதில்: தேவையில்லை எனக் கருதுகிறேன். கடந்த 60 ஆண்டுகளாக எல்லாவற்றையும் இன ரீதியாகவே தேசிய முன்னணி அரசாங்கம் பார்த்தும், செய்தும் வந்திருக்கிறது. இந்தியர் பிரச்சனையா, மஇகாவோ அதன் தலைவரோ கையாளட்டும் என ஒதுக்கி வைத்தார்கள். இப்போது அப்படி அல்ல. எல்லா இனங்களின் பிரச்சனைகளையும் எல்லா அமைச்சர்களும், மாநில முதலமைச்சர்களும் கையாள்கிறோம்.

ஆனால், பழைய தேசிய முன்னணி தலைமைத்துவ பாணியில் ஊறித் திளைத்த மக்கள் இன்னும் அதே போன்ற கட்டமைப்பை, எதிர்பார்க்கிறார்கள். இந்தியர்களுக்கென ஓர் இந்தியத் தலைவர் வேண்டும் என்ற சிந்தனை முறையைக் கொண்டிருக்கிறார்கள். இது அவர்களின் தவறல்ல. 60 ஆண்டுகால தேசிய முன்னணி ஆட்சியினால் விளைந்த பிரதிபலன். அத்தகைய ஆட்சி முறையால் ஏற்பட்ட, மக்களின் மனங்களில் அழுத்தமாகவும், ஆழமாகவும் பதியவைக்கப்பட்ட சிந்தனை. இத்தகைய இன அடிப்படையிலானக் கட்டமைப்பிலிருந்து முதலில் அவர்களை வெளியே கொண்டு வர வேண்டும்.

அதிலும், இந்தியர்கள் பின்தங்கிய சமூகமாக இருப்பதால் அவர்களிடம் மேலும் அதிகமான எதிர்பார்ப்புகள் நிலவுகின்றன. தங்களுக்கென ஒவ்வொரு பிரச்சனையிலும் ஓர் இந்தியத் தலைவர் குரல் கொடுக்க வேண்டும் என நினைக்கிறார்கள்.

என்னைப் பொறுத்தவரையில் நான் எந்தப் பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் இந்தியர் பிரச்சனைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருவேன்.

அந்த வகையில்தான், சாகிர் நாயக் விவகாரத்தில் நான் குரல் கொடுத்ததோடு, தொடர்ந்து அமைச்சர் முஜாஹிட்டுடனும், சம்பந்தப்பட்ட முப்டியுடனும் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டேன். சீ பீல்ட் விவகாரத்திலும் குரல் கொடுத்தேன்.

வேதமூர்த்தி பதவி விலக வேண்டும் என அறைகூவல்கள் எழுந்தபோது அவரைத் தற்காத்தேன். அவர் இந்தியர் என்பதால் அல்ல. எந்த ஓர் அமைச்சரையும் அத்தகைய சூழலில் பதவி விலகச் சொல்வது – அவருக்கு சம்பந்தமில்லாத விவகாரத்திற்காக அவரை பதவி விலகச் சொல்வது – நியாயமில்லை என்பதால்தான் அவரைத் தற்காத்தேன்.

தொடர்ந்து இந்தியர்கள் அல்லாத விவகாரங்களிலும் நான் குரல் கொடுத்து வந்திருக்கிறேன். எனது கருத்துகளைப் பதிவிட்டு வந்திருக்கிறேன். மக்களுக்கான, குறிப்பாக இந்தியர்களுக்கான எனது போராட்டக் குரல் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கும். பின்வாங்க மாட்டேன்.

ஆனால், நம்பிக்கைக் கூட்டணிக்கென தனியாக ஓர் இந்தியத் தலைவர் நியமிக்கப்பட்டு அவர் மூலமாகத்தான் இந்தியர் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க வேண்டும் என்பது சரியான தீர்வல்ல.

அடுத்து:

  • பினாங்கு முதல்வராக இருந்து கொண்டு விடுதலைப் புலிகள் விவகாரத்தில் பேசுவதும், ஆதரிப்பதும் முறையா?

இராமசாமியில் பதில்கள்?…..தொடர்கின்றன!

-நேர்காணல்: இரா.முத்தரசன்

பேராசிரியர் பி.இராமசாமியின் நேர்காணலின் முதல் பகுதியைக் கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்:

“இந்தியர்களுக்கான எனது போராட்டக் குரல் என்றும் ஒலிக்கும்” – செல்லியல் சிறப்பு நேர்காணலில் இராமசாமி (1)

 

காணொளி வடிவம்: