Home நாடு செல்லியலில் இனி தேசிய மொழியிலும் செய்திகள் வெளிவரும்

செல்லியலில் இனி தேசிய மொழியிலும் செய்திகள் வெளிவரும்

1065
0
SHARE
Ad

கோலாலம்பூர் – தற்போது ஏழாம் ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைக்கும் செல்லியல் இணைய ஊடகத்தில், புத்தாண்டு தொடங்கியது முதல் இன்னொரு புதுமையான மாற்றத்தை வாசகர்கள் உணரத் தொடங்கியிருப்பார்கள்.
தமிழ், ஆங்கிலம், ஆகிய மொழிகளோடு தேசிய மொழியான மலாய் மொழியிலும் செய்திகளை நாம் வெளியிட்டு வருவதை வாசகர்கள் நிச்சயம் கவனிக்கத் தொடங்கியிருப்பார்கள்.

இதன்வழி, மொபைல் எப் எனப்படும் செல்பேசிகளுக்கான குறுஞ்செயலியாக மலேசியாவில் மூன்று மொழிகளில் வெளியிடப்படும் ஒரே இணைய ஊடகமாக செல்லியல் உருவெடுத்துள்ளது.

மேலும் மலேசியாவில் அறிவிக்கைகளோடு (push messages) திறன்பேசிகளில் குறுஞ்செயலியாக வெளிவரும் ஒரே தமிழ்-ஆங்கில இருமொழி ஊடகமாக இருந்த செல்லியல், இனி மும்மொழி ஊடகமாக வலம் வரும்.

#TamilSchoolmychoice

தமிழ் மொழிச் செய்திகளுக்கு முதலிடம் கொடுத்து நாம் இயங்கிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் ஆங்கிலத்தின் பயன்பாட்டையும், பரவலாக அனைத்துத் தரப்பு மக்களையும் – இந்தியர்கள் அல்லாதவர்களையும் சென்றடையும் அதன் வீச்சையும் – உணர்ந்ததால்தான் தொடக்கம் முதலே செல்லியலில் ஆங்கிலச் செய்திகளையும் நாம் வெளியிட்டு வந்தோம்.

தற்போது மலாய் மொழிக்கும் நாம் நமது ஊடகத் தளத்தை விரிவுபடுத்த வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம் என்பதை உணர்ந்திருக்கிறோம்.

நமது செல்லியல் அதிகமாக, தமிழ்ப் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், தமிழ்ப் பள்ளிகள் மற்றும் தமிழ் மொழி ஆர்வலர்களால் படிக்கப்படும்போது பலர் பல தருணங்களில் ஆங்கிலத்தை விட மலாய் மொழியில் செய்திகளைப் படிப்பது சுலபமாகவும் எளிதில் புரிந்து கொள்ளும்படியும் இருக்கிறது என்று கூறியிருக்கிறார்கள். அவர்களின் கல்விப் பின்புலமும் அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

இன்றைக்கு ஆரம்பப் பள்ளியை முடித்து இடைநிலைப் பள்ளிக்கு செல்லும் ஒரு மாணவனுக்கு மலாய் மொழியின் பயன்பாடு ஆங்கிலத்தை விட மிக அதிகமாக இருக்கிறது. அதனால் இயல்பாகவே அவனுக்கு மலாய் மொழியில் படிப்பது சுலபமாக இருக்கிறது.

அரசாங்கமும், நமது தலைவர்களும், அதிலும் இந்தியத் தலைவர்கள் கூட தங்களின் பத்திரிக்கை அறிக்கைகளை மலாய் மொழியிலேயே வெளியிடுகிறார்கள். பெர்னாமா போன்ற தேசிய செய்தி நிறுவனங்களும் மலாய் மொழியிலேயே ஏராளமான அளவில் உள்நாட்டுச் செய்திகளை வழங்கி வருகின்றன.

இந்நிலையில் மலாய் மொழியிலேயே இவ்வாறு ஏராளமான செய்திகள் நமக்குக் கிடைக்கப் பெறுவதால், அம்மொழியிலேயே செல்லியலில் செய்திகளை வழங்குவதன் மூலம், மேலும் ஏராளமான வாசகர்களை பயனான முறையில் செல்லியல் சென்றடைய முடியும். இதன்வழி, செல்லியல் இன்னும் விரிவான தளத்தில் இயங்க முடியும் என்னும் பரந்த நோக்கத்தோடு இனி மலாய் மொழியிலும் தொடர்ந்து செய்திகளை வெளியிடத் திட்டமிட்டுச் செயல்படுத்தி வருகிறோம்!

இதற்குரிய தொழில்நுட்ப வசதிகளையும், மும்மொழி ஆற்றல் கொண்ட ஆசிரியர் குழுவினரையும் செல்லியல் கொண்டிருக்கின்றது என்பது இந்தத் திட்டத்தை வெற்றிகரமாகத் தொடர்ந்து செயல்படுத்துவதற்கு செல்லியல் பெற்றிருக்கும் கூடுதல் பலமாகும்!

இதன் மூலம் மாணவர்கள், குறிப்பாகத் தமிழ்ப் பள்ளி மாணவர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட செல்லியல் செய்திகளை மூன்று மொழிகளிலும் படிப்பதன் வழி தங்களின் மும்மொழி ஆற்றலை மேலும் வளர்த்துக் கொள்ள, செம்மைப் படுத்திக் கொள்ள முடியும்.

மாணவர்களுக்கு இவ்வாறு உதவ வேண்டும் என்பதே மலாய் மொழியில் நாங்கள் செய்திகளை வெளியிடுவதற்கான முதன்மைக் காரணம்.

தமிழ், ஆங்கில மொழிச் செய்திகளை சரளமாகப் படிக்க முடியாதவர்களுக்கு, மலாய் மொழியில் அத்தகைய ஆற்றல் இருந்தால் இனி அவர்களும் செல்லியல் செய்திகளை இனி மலாய் மொழியில் படித்து நாட்டு நடப்புகளைத் தெரிந்து கொள்ளலாம்.

பலர் மலாய் செய்திகளுக்கு ஆதரவும் வரவேற்பும் தெரிவித்திருக்கும் அதே வேளையில், இதனால் தமிழ் மொழி செய்திகளின் எண்ணிக்கை குறைந்து விடுமா என்ற கவலையையும், கரிசனத்தோடு கேட்டிருக்கிறார்கள்.

மலேசியாவின் முதன்மையான தமிழ் மொழி இணைய ஊடகமாக செல்லியல் தொடர்ந்து நிலைத்திருக்கும் – தனது பணிகளையும், கடமைகளையும் ஆற்றிவரும் என்பதை உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆங்கில, மலாய் செய்திகளின் வருகையால் தமிழ் மொழிக்கான முக்கியத்துவமும், செய்திகளின் எண்ணிக்கையும் எந்த அளவிலும் குறையாது – மேலும் மெருகுடன் தமிழிலும் செய்திகள் தொடர்ந்து அதிக அளவில் இடம் பெற்றுவரும் என்ற உறுதியையும் இவ்வேளையில் வழங்குகிறோம்.

“செல்லியல்” என்று தூயத் தமிழிலேயே பெயரைக் கூறி தனது அடையாளத்தை காட்டுகிறது இந்த ஊடகம்! மற்றமொழிகளிலும் செய்திகளை வழங்கும் தமிழ் ஊடகமாகவே இது நிலைத்திருக்கும்!

செல்லியல் இணைய ஊடகத்திற்கான உங்களின் உற்சாக வரவேற்பு எப்போதும் தொடரும் என்றும் நம்புகிறோம்.

-செல்லியல் நிருவாகக் குழுமம்