புதுடில்லி – பிகேஆர் கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இந்தியாவுக்கான 5 நாள் வருகையின் தொடக்கமாக நேற்று இந்தியத் தலைநகர் புதுடில்லி வந்தடைந்தார்.
அவருடன் மேலும் 4 மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடன் வந்துள்ளனர். தனது வருகையின்போது இங்குள்ள இந்திய அரசாங்கத் தலைவர்களையும், பிரமுகர்களையும் அன்வார் சந்தித்து உரையாடுவார்.
நாளை வியாழக்கிழமை ‘ரெய்சினா கலந்துரையாடல்’ ‘(Raisina Dialogue’) என்ற பெயரில் ஆண்டுதோறும் நடைபெறும் உயர்மட்டத் தலைவர்களின் கருத்தரங்கத்தில் பங்கு கொண்டு அன்வார் உரையாற்றுவார்.
ரெய்சினா கலந்துரையாடல் என்பது ஆண்டுதோறும் புதுடில்லியில் அறிஞர்களும் சிந்தனாவாதிகளும் கொண்ட “ஒப்சர்வர் ரிசர்ச் அறவாரியம்” (Observer Research Foundation) என்ற அமைப்பால் இந்திய வெளியுறவு அமைச்சின் ஒத்துழைப்புடன் நடத்தப்படுவதாகும். உலகப் பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சனைகளின் கருத்துப் பரிமாற்றக் களமாக இந்த கலந்துரையாடல் அமைகிறது.
புதுடில்லியின் அதிபர் மாளிகையும், அரசாங்கத்தின் முக்கிய அலுவலகங்களும் அமைந்துள்ள சிறு குன்று போன்ற அமைப்பைக் கொண்ட பகுதியே ரெய்சினா ஹில் என அழைக்கப்படுகிறது. இதன்காரணமாகவே, ஆண்டுதோறும் உயர்மட்டத் தலைவர்களின் இந்த கலந்துரையாடலும் ரெய்சினா கலந்துரையாடல் என அழைக்கப்படுகிறது.
நேற்று தொடங்கிய ரெய்சினா கலந்துரையாடல் கூட்டத்தை இந்தியாவுக்கு அதிகாரத்துவ வருகை மேற்கொண்டிருக்கும் நோர்வே பிரதமர் எர்னா சோல்பெர்க் தொடக்கி வைத்தார். இந்த தொடக்க நிகழ்ச்சியில் இந்தியப் பிரதமர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜூம் கலந்து கொண்டனர்.
கர்நாடக முதல்வருடன் அன்வார் சந்திப்பு
தனது இந்திய வருகையின் ஒரு பகுதியாக அன்வார் இப்ராகிம் கர்நாடக முதல்வர் எச்.டி.குமாரசாமியுடன் பெங்களூருவில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார்.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை பெங்களூருவில் நடைபெறும் இந்தியத் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பின் வணிகக் கலந்துரையாடலிலும் பங்கு பெற்று அன்வார் உரையாற்றுவார்.
இந்தியத் தொழில்நுட்ப நிறுவனங்களின் உயர்மட்ட நிர்வாகிகளுடனும் அன்வார் பெங்களூருவில் சந்திப்பு ஒன்றை நடத்துவார்.