Home நாடு “செனட்டர் பதவியை மாற்றாகப் பெற்றதால் மஇகா கேமரனை விட்டுக் கொடுத்ததா?” இராமசாமி கேள்வி!

“செனட்டர் பதவியை மாற்றாகப் பெற்றதால் மஇகா கேமரனை விட்டுக் கொடுத்ததா?” இராமசாமி கேள்வி!

1958
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன் – இன்று கேமரன் மலை இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நடைபெறும் வேளையில், கேமரன் மலை தொகுதியை மஇகா ஏன் விட்டுக் கொடுத்தது என்ற சர்ச்சை தொடர்ந்து நீடித்து வருகிறது.

சீ பீல்ட் ஆலய விவகாரத்தால் மலாய்-முஸ்லீம் வாக்காளர்கள் மஇகா வேட்பாளருக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்ற அச்சத்தினாலேயே தாங்கள் தொகுதியை விட்டுக் கொடுத்திருப்பதாக மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் அறிவித்திருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்திருக்கும் பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி, இன்னொரு செனட்டர் பதவியை மாற்றாகப் பெற்ற காரணத்தினாலேயே மஇகா கேமரன் மலையை விட்டுக் கொடுத்தது எனக் குற்றம் சாட்டியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

“மஇகா தேசியத் தலைவர் கேமரன் தொகுதியை விட்டுக் கொடுத்ததற்கான தரமான, நம்பும்படியான விளக்கத்தைக் கொடுக்க வேண்டும்.  சீ பீல்ட் விவகாரத்தினால் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொள்கிறோம் என்று கூறுவது எந்தவகையிலும் நம்பும்படியாக இல்லை. ஆரூடங்களின்படி மஇகாவுக்கு பகாங் மாநில செனட்டர் பதவி ஒன்றும், அதே மாநிலத்தில் நிலம் ஒன்றும் ஒதுக்கப்படுவதால்தான் கேமரனை அது விட்டுக் கொடுத்தது எனக் கூறப்படுகிறது. மஇகா ஏன் உண்மையிலேயே தனது பாரம்பரியத் தொகுதியான கேமரனை விட்டுக் கொடுத்தது என்ற காரணம் வெளிவராமலே போகலாம்” என்றும் இராமசாமி வெளியிட்ட அறிக்கையொன்றில் தெரிவித்திருக்கிறார்.

“இப்போது கேமரன் மலையில் போட்டியிடாததற்கு சீ பீல்ட் விவகாரத்தைக் காரணமாகக் கூறும் விக்னேஸ்வரன் அன்றைக்கு போர்ட்டிக்சனில் ஏன் போட்டியிடவில்லை? அப்போது சீ பீல்ட் விவகாரம் எழவில்லையே?” என்றும் இராமசாமி தனது அறிக்கையில் கேள்வி எழுப்பியிருக்கிறார்.