புதுடில்லி – இந்தியாவுக்கு 5 நாள் வருகை மேற்கொண்டிருக்கும் பிகேஆர் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், இங்கு நடைபெற்று வரும் ரெய்சினா கலந்துரையாடலில் கலந்து கொண்டதோடு நேற்று அந்தக் கலந்துரையாடலில் சிறப்புரையும் நிகழ்த்தினார்.
இதற்கிடையில் நேற்று அன்வார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியையும் சந்தித்துப் பேசினார். இருதரப்பு வணிகம், கலாச்சாரம், ஜனநாயகம், ஆகிய அம்சங்கள் உள்ளிட்ட பல விவகாரங்களைத் தாங்கள் இருவரும் விவாதித்ததாக அன்வார் பின்னர் டுவிட்டர் தளத்தில் பதிவிட்டார்.
இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ்ஜையும் அன்வார் சந்தித்துப் பேசினார். இருநாடுகளுக்கும் இடையிலான நட்புறவு தொடர்ந்து மேம்படுவது தொடர்பில் சுஷ்மாவுடனான தனது சந்திப்பு அமைந்ததாக அன்வார் தெரிவித்துள்ளார்.
அன்வாருடன் இந்தியாவுக்கு வருகை தந்திருக்கும் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களில் சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் கேசவன், சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எட்மண்ட் சந்தாராவும் ஆகியோரும் அடங்குவர்.
அன்வார் தொடர்ந்து இன்று முதல் பெங்களூருக்கு வருகை தந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதோடு, கர்நாடக மாநில முதல்வர் எச்.டி.குமரசாமியுடன் சந்திப்பொன்றையும் நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.