Home அரசியல் “துணிவிருந்தால் கேலாங் பாத்தாவில் என்னோடு போட்டியிடுங்கள்” – மகாதீருக்கு கிட் சியாங் சவால்

“துணிவிருந்தால் கேலாங் பாத்தாவில் என்னோடு போட்டியிடுங்கள்” – மகாதீருக்கு கிட் சியாங் சவால்

723
0
SHARE
Ad

Lim-Kit-Siang--4ஏப்ரல் 1 – லிம் கிட் சியாங்கின் அரசியல் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வாருங்கள் என முன்னாள் பிரதமர் துன் மகாதீர் ஜோகூர் மக்களுக்கு விடுத்திருந்த அறைகூவலைத் தொடர்ந்து “துணிவிருந்தால் என்னோடு நேரடியாக கேலாங் பாத்தா தொகுதியில் மோதிப் பாருங்கள்” என்று ஜசெக தலைவர் லிம் கிட் சியாங் மகாதீருக்கு சவால் விடுத்துள்ளார்.

அதே வேளையில் உண்மையிலேயே மகாதீர் அரசியலில் இருந்து ஓய்வு பெற்று விட்டாரா என்றும் லிம் கிட் சியாங் கேள்வி எழுப்பியுள்ளார்.

“இந்த கேள்விக்கு யாரைக் கேட்டாலும் இல்லை என்றுதான் கூறுவார்கள். காரணம், நாள்தோறும், பத்திரிக்கை அறிக்கைகள் விடுவதோடு, 22 ஆண்டுகள் பிரதமராக இருந்த போது எப்படி நிறைய அரசியல் பணிகளை மேற்கொண்டிருந்தாரோ அதே போன்றுதான் மகாதீர் இப்போதும் நடந்து கொள்கின்றார். அம்னோவும், தேசிய முன்னணியும் என்ன செய்ய வேண்டும் என்று அவர்தான் கட்டளையிடுகின்றார்” என்றும் லிம் கிட் சியாங் கூறினார்.

#TamilSchoolmychoice

“முன்னாள் பிரதமர் அப்துல்லா படாவியை மகாதீர்தான் பிரதமர் பதவியிலிருந்து கவிழ்த்தார். இப்போது நஜிப் 13வது பொதுத் தேர்தலில் எதிர்பார்த்த வெற்றியை பெற்றுத் தராவிட்டால் அவர் தனது பதவியிலிருந்து விலகவேண்டும் என்று மகாதீர் மிரட்டியுள்ளார். இதிலிருந்து பின்னணியில் இருந்து இயக்கிக் கொண்டிருக்கும் “உண்மையான பின்னணி பிரதமராக” மகாதீர்தான் திகழ்கின்றார் என்று சொன்னால் அது மிகையல்ல” என்றும் லிம் குறிப்பிட்டார்.

“இன்றைக்கு நஜிப் பார்த்து அதிகமாக பயப்படும் மனிதராக மகாதீர் திகழ்கின்றார். காரணம், நஜிப்பின் அரசியல் முடிவு மகாதீரின் கையில்தான் இருக்கின்றது.” என்று லிம் சுட்டிக் காட்டியுள்ளார்.

“கேலாங் பாத்தாவில் என்னோடு போட்டியிடுங்கள்”

“எனவே, இன்னும் அரசியலில் இருந்து ஓய்வு பெறாமல் இருக்கும் மகாதீர் என்னை எதிர்த்து கேலாங் பாத்தாவில் போட்டியிடட்டும். எங்கள் இருவரில் யாருடைய அரசியல் வாழ்க்கையை கேலாங் பாத்தா முடிவு கட்டப் போகிறது என்பதையும் பார்ப்போம்” என லிம் கிட் சியாங் மகாதீருக்கு சவால் விடுத்தார்.

“கேலாங் பாத்தா மலேசிய நாட்டு மக்கள் தொகை விகிதாச்சாரத்தை ஏறத்தாழ பிரதிபலிக்கும் ஒரு தொகுதி. இங்கே 53 சதவீத சீன வாக்காளர்களும் 33 சதவீத மலாய் வாக்காளர்களும், 12 சதவீத இந்திய வாக்காளர்களும் இருக்கின்றனர். இந்த தொகுதி  எல்லா காலத்திலும் தேசிய முன்னணியின் கோட்டையாகவே இருந்து வந்துள்ளது. எனவே, மகாதீர் இங்கே தைரியமாக நிற்கலாம். எனது அரசியல் வாழ்க்கையை தீர்மானிக்க கேலாங் பாத்தா வாக்காளர்களிடம் என்னை ஒப்படைத்து விட்டேன். அதேபோன்று ஒப்படைக்க மகாதீர் தயாரா?” என்றும் லிம் கிட் சியாங் கூறினார்.