கோலாலம்பூர்: நம்பிக்கைக் கூட்டணி தரப்பினர் கேமரன் மலை இடைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், வாக்குகளை வாங்குவதற்காக பணம் கொடுத்தது போன்ற படங்கள் சமூக ஊடகங்களில் உலாவிக் கொண்டிருப்பது மக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. இது குறித்து இன்று (திங்கட்கிழமை) பிரதமர் மகாதீர் முகமட்டிடம் வினவியபோது, நம்பிக்கைக் கூட்டணி கட்சி யாருக்கும் பணம் கொடுக்கவில்லை என மறுத்தார்.
ஆயினும், நம்பிக்கைக் கூட்டணி அரசு ஏற்கனவே, மக்களுக்காக பல்வேறு நிதியுதவிகளை வழங்கியுள்ளது எனவும், மக்கள் மேம்பாட்டு நிதித் திட்டத்தின் வாயிலாக அப்பணம் கொடுக்கப்பட்டிருந்தால், அவை எல்லோருக்கும் கிடைக்க வேண்டிய பணம்தான் என பிரதமர் கூறினார்.
வருகிற ஜனவரி 26-ம் தேதி கேமரன் மலை இடைத் தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவுகிறது. நம்பிக்கைக் கூட்டணி அரசைப் பிரதிநிதித்து எம் மனோகரனும், தேசிய முன்னணியைப் பிரதிநிதித்து ரம்லி முகமட் நூரும், தன்னிச்சையாக சலேயுட்டின் அப்துல் தாலிப் மற்றும் வோங் செங் யீ ஆகியோர் போட்டியிடுகின்றனர்.