கோலாலம்பூர் – நாள்தோறும் 24 மணி ஒலிபரப்பை வழங்கி, நேயர்களுக்கு சிறந்த நிகழ்ச்சிகளைப் படைத்து வருவது ஒருபுறமிருக்க, ஆண்டுதோறும் இந்தியர்களின் முக்கியப் பெருநாட்களை, ஊடக நண்பர்களோடு இணைந்து கொண்டாடுவதை வழக்கமாக் கொண்டுள்ளது மின்னல் பண்பலை (எப்.எம்).
அந்த வகையில், கடந்த ஆண்டுகளைப் போலவே, இவ்வாண்டும் மின்னல் வானொலி நிலைய அதிகாரிகளும் பணியாளர்களும் பொங்கல் விழாவை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். தைத் திங்கள் இரண்டாம் நாளில் ஆர் டி எம் அங்காசாபுரி வளாகத்தில் நேயர்கள், ஊடக நண்பர்களுடன் மின்னல் வானொலி நிலையத்தினர், 21 பானைகளில் பொங்கல் வைத்து மகிழ்ந்தனர்.
நேயர்கள், ஊடக நண்பர்கள், மின்னல் வானொலி நிலையத்தினர் ஆகியோரை ஒன்றிணைக்கும் நிகழ்ச்சியாகவும் இந்த கொண்டாட்டம் அமைந்தது என மின்னல் பண்பலை நிர்வாகி சுமதி கூறினார். ஆர் டி எம்மின் செய்தி- நடப்பு விவகார பிரிவு இயக்குனர் சே ரொஹானா சே ஒமார் (PUAN CHE ROAHANA CHE OMAR), வானொலி துணை இயக்குனர் நோர்டின் சுலைமான், பிற மொழி வானொலி நிலைய நிர்வாகிகள், ஆர் டி எம்மின் மூத்த அதிகாரிகள், பிற இன பணியாளர்கள் என பலரும் இந்த பொங்கல் கொண்டாட்டத்தில் கலந்து சிறப்பித்தனர்.
இந்த ஒற்றுமைத் திருநாள் கொண்டாட்டத்திற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் நேயர்களும் ஊடக நண்பர்களும் பொங்கல் வைக்கும் போட்டியில் பங்கெடுத்துக் கொண்டனர். உரி அடித்தல் போன்ற போட்டி நிகழ்ச்சியில் நேயர்கள் கலந்து கொண்டு பொங்கல் நிகழ்ச்சிக்கு மேலும் உற்சாகத்தையும், கலகலப்பையும் ஏற்படுத்தி மகிழ்ந்தனர்.
மின்னல் வானொலி, தனது நேயர்களுடன் எப்போதுமே அணுக்கமான தொடர்பினைக் கொண்டிருப்பதாகக் கூறிய நிர்வாகி சுமதி, இது போன்ற நிகழ்ச்சிகளின் வழி அவர்களை நேரிடையாகச் சந்திக்கும் வாய்ப்பும் கிடைப்பதாகக் கூறினார்.
நிகழ்ச்சியின் இடையிடையே பாரம்பரிய நடனங்களும் படைக்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் சுவையான உணவும் வழங்கப்பட்டது.
மின்னல் பண்பலை பொங்கல் கொண்டாட்டத்தின் படக் காட்சிகளை இங்கே காணலாம்: