அலகாபாத் – கடந்த ஜனவரி 15-ஆம் தேதி கோலாகலமாகத் தொடங்கியது புனித நீராடும் இந்துக்களின் திருவிழாவான கும்ப மேளா.
ஏறத்தாழ 120 மில்லியன் இந்துக்களும் சுற்றுப் பயணிகளும் இந்த கும்ப மேளாவில் அடுத்து வரும் வாரங்களில் திரளுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கும்ப மேளா தொடக்க விழாவில் ஏறத்தாழ 25 மில்லியன் பேர் திரண்டனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கும்பமேளாவின் காட்சிகளை இந்தியாவின் விண்வெளி ஆய்வுக் கழகமான இஸ்ரோவும் தனது துணைக் கோளங்களின் வழியாக புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டது.
இந்தத் திருவிழாவுக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தரைவழி, நதிவழி மட்டுமின்றி, ஆகாய வழியாகவும் பாதுகாப்புக் கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அதே வேளையில் வரலாறு காணாத வசதிகளும் இங்கு வரும் பக்தர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த திருவிழாவுக்காக சுமார் 3,200 ஹெக்டர் பரப்பளவில் உலகின் மிகப் பெரிய தற்காலிக நகர் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நகரை உருவாக்க செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது.
இந்நகரைச் சுற்றிலும் 40,000 எல்இடி (LED) இரக விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 1,000 கண்காணிப்பு மறைக்காணிகள் (சிசிடிவி கேமரா) பொருத்தப்பட்டுள்ளன.
உத்தரப் பிரதேச காவல் துறையினருக்காக சிறப்பு மோட்டார் சைக்கிள்களும் வழங்கப்பட்டுள்ளன.
கும்ப மேளாவுக்காக வருவதற்காக கூடுதல் சிறப்பு இரயில்கள், சிறப்பு பேருந்துகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
முதல் இரண்டு நாட்களில் கும்ப மேளாவில் திரண்ட பிரம்மாண்டமான மக்கள் கூட்டம், அசத்தலான காட்சிகளை சமூக ஊடகங்களில் மக்கள் பகிர்ந்து வருகிறார்கள். அவற்றை இங்கே காணலாம்:

