கோலாலம்பூர் – அதிகாரத்துவ வருகை மேற்கொண்டு தற்போது ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றிருக்கும் பிரதமர் துன் மகாதீர், தைப்பூசத்தை முன்னிட்டு வெளியிட்டிருக்கும் செய்தியில் மலேசியாவில் நிலவும் இன ஒற்றுமைக்கான மற்றொரு அடையாளமாக இந்துக்கள் கொண்டாடும் தைப்பூசத் திருநாள் திகழ்கிறது எனக் கூறியுள்ளார்.
தைப்பூசச் செய்தியை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் மகாதீர்,இந்துக்கள் முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டாடும் விழாவாக தைப்பூசம் இருந்தாலும் அந்த விழாக் கொண்டாட்டங்களில் மற்ற இனங்களும், மற்ற மத நம்பிக்கைக் கொண்டவர்களும் பங்கு கொள்கின்றனர்.
“மலேசியாவில் நிலவும் இன, மத ஒற்றுமையை தைப்பூசம் பிரதிபலிக்கிறது. மற்ற மதத்தைச் சேர்ந்தவர்களும் தங்களின் இந்து நண்பர்களுடன் இணைந்து தைப்பூசத்தைக் கொண்டாடுகின்றனர். அவர்களோடு ஒன்றிணைந்து தைப்பூச விழாவில் மற்றவர்களும் பங்கு கொள்கிறார்கள்” என்றும் மகாதீர் தனது செய்தியில் குறிப்பிட்டிருக்கிறார்.
தைப்பூசத் திருவிழாவுக்கு வாழ்த்துகள் தெரிவிப்பதோடு, அனைவரும் இந்த நாளை மகிழ்ச்சியோடு கொண்டாடுவார்கள் என்றும் மகாதீர் நம்பிக்கைத் தெரிவித்தார்.