ஹாலிவுட் – 2019-ஆம் ஆண்டுக்கான 91-வது ஆஸ்கார் அகாடமி விருதுகள் நேற்று செவ்வாய்க்கிழமை காலை அறிவிக்கப்பட்டன.
இதில் 8 படங்கள் சிறந்த படங்களுக்கான தேர்வில் மோதுகின்றன. இந்தப் பிரிவில் ஒரு முதல் சாதனையாக நெட்பிலிக்ஸ் நிறுவனம் தயாரித்த ‘ரோமா’ (Roma) என்ற படம் சிறந்த படத் தேர்வுக்காக மோதுகிறது. கையடக்கக் கருவிகள் மற்றும் இணையம் வழி கட்டணம் செலுத்தி திரைப்படங்களை ஒளிபரப்பும் நெட்பிலிக்ஸ் தயாரித்த இந்தப் படம் திரையரங்குகளில் ஒருவாரம் திரையிடப்பட்டது.
ஆஸ்கார் விருதுகளுக்குப் போட்டியிட வேண்டுமென்றால், இணையத்திற்காக மட்டும் தயாரிக்கப்பட்ட படங்கள் போட்டியில் சேர்த்துக் கொள்ளப்படமாட்டாது. அந்தப் படம் குறைந்த பட்சம் ஒருவாரமாவது திரையரங்குகளில் திரையிடப்பட்டிருக்க வேண்டும் என்பது ஆஸ்கார் அகாடமியின் விதியாகும்.
அந்த வகையில் ‘ரோமா’ படம் நெட்பிலிக்சால் தயாரிக்கப்பட்டிருந்தாலும், ஆஸ்காரைக் குறிவைத்துத் தயாரிக்கப்பட்ட அந்தப் படம் திரையரங்குகளிலும் திரையிடப்பட்டது.
அதற்கேற்ப சிறந்த படத்திற்கான போட்டியில் குதித்திருக்கும், முதல் நெட்பிலிக்ஸ் தயாரிப்பாக ரோமா திகழ்கிறது. பல்வேறு பிரிவுகளில் 10 ஆஸ்கார் விருதுகளுக்கான பரிந்துரைகளை ரோமா பெற்றிருக்கிறது.
மற்றொரு சிறந்த படமாகக் கருதப்படும் ‘தி பேவரிட்’ (The Favourite) என்ற படமும் 10 ஆஸ்கார் பரிந்துரைகளைப் பெற்றிருக்கிறது.
ஒரு சூப்பர் ஹீரோ கதையான ‘பிளேக் பெந்தர்’ (Black Panther) என்ற படமும் சிறந்த படத்திற்கான போட்டியில் குதிக்கிறது. வணிக ரீதியில் தயாரிக்கப்பட்ட ஒரு சூப்பர் ஹீரோ படமான பிளேக் பெந்தர் சிறந்த படத்திற்கான போட்டியில் குதிப்பது இதுவே முதன் முறை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் எங்கும் கோடிக்கணக்கான தொலைக்காட்சி இரசிகர்கள் கண்டு மகிழும் ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா எதிர்வரும் பிப்ரவரி 24-ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும்.