இங்கிலாந்து: இரவில் தூங்காமல் வாட்சாப்பில் இயங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு வாட்சாப் நிறுவனம் கூடிய விரைவில் வெளிச்சத்தைக் குறைக்கும் அம்சத்தை (Dark Mode) அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தகவல் பரிமாற்றத்திற்காக பயன்பட்டு வரும் செயலிகளில் வாட்சாப் நம் அனைவருக்கும் முக்கியமான ஒன்றாகிவிட்டது. 2014-ஆம் ஆண்டு பேஸ்புக் நிறுவனம் இந்த செயலியைக் கைப்பற்றியப் பிறகு பல்வேறு அமைப்புகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
வாட்சாப்பை இரவில் பயன்படுத்தும் போது அதிகப்படியான வெளிச்சம் காரணமாக, கண் கூசுவதால், அதற்கு தீர்வுக் காணும் பொருட்டு வெளிச்சத்தைக் குறைக்கும் அம்சத்தை அந்நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது தொடர்பாக மாதிரிப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன. ஆயினும், வாட்சாப் நிறுவனம் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை.
வாட்சாப்பின் வால்பேப்பரைக் கருப்பு நிறத்தில் மாற்றிக் கொள்ளும் வசதி இந்த அம்சத்திற்கு உள்ளது. இவ்வாறான வசதி யூடியூப், டுவிட்டர் உள்ளிட்ட சேவைகளில் புழக்கத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.