கேமரன் மலை: நாளை சனிக்கிழமை (ஜனவரி 26) நடைபெற இருக்கும் இடைத் தேர்தலை ஒட்டி பிரதமர் மகாதீர் முகமட் கோலா லிபிஸ் வாழ் மக்களை இன்று (வெள்ளிக்கிழமை) சந்தித்தார். பொதுவாக இடைத் தேர்தல்களுக்கு பிரதமர் களம் இறங்குவது அரிதான ஒன்று. ஆயினும், இம்முறை கேமரன் மலையில் நடைபெற இருக்கும் இடைத் தேர்தலானது நம்பிக்கைக் கூட்டணிக்கு முக்கியமான ஒன்றாக இருப்பதால் பிரதமர் களம் இறங்கியிருக்கிறார்.
அச்சந்திப்பின் போது, பிரதமர் தவறியும் தேசிய முன்னணிக்கு வாக்களிக்க வேண்டாமென்றும் கேமரன் மலை வாழ் மக்களைக் கேட்டுக் கொண்டதோடு, தமது ஆயுட்காலம் உள்ள வரையில் நாட்டிற்குத் தேவையான மாற்றங்களை செய்துக் கொண்டே இருக்கப்போவதாகக் கூறினார்.
சூழ்ச்சிக்காக பூர்வக்குடி சமூகத்திலிருந்து வேட்பாளரை நிறுத்தி இருக்கும் தேசிய முன்னணியை, ஒரு போதும் நம்பி விட வேண்டாமென்றும், அவர்கள் பதவிக்காக எது வேண்டுமானாலும் செய்வார்கள் எனவும் பிரதமர் கூறினார்.