கோலாலம்பூர்: 1எம்டிபி ஊழல் விவகாரத்தில் சம்பந்தம் உள்ளதாக நம்பப்படும் நால்வரை, காவல் துறையினர் தேடி வருவதாக, காவல் துறைத் தலைவர் டான்ஶ்ரீ முகமட் புசி ஹருண் கூறினார்.
இந்த வழக்கில் ஏற்கனவே தேடப்பட்டு வரும் ஜோ லோவின் பெற்றோர்களான டான்ஶ்ரீ லேரி லோ ஹொக் பெங் மற்றும் கோ காய்க் ஈவ், சிங்கப்பூர் நாட்டவரான சம்னம் நரேண்டாஸ் டஸ்வாணி, மற்றும் டான் கிம் லூங் ஆகியோரை காவல் துறையினர் தேடி வருவதாக அவர் கூறினார்.
2001-ஆம் ஆண்டுக்கான பண மோசடி, பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் சட்ட விரோத நடவடிக்கைகள் சட்டத்தின் கீழ் இவர்கள் விசாரிக்கப்படுவார்கள் என அவர் தெரிவித்தார்.
இவர்களைக் குறித்த தகவல்கள் ஏதேனும் இருந்தால் பொதுமக்கள் அருகாமையிலுள்ள காவல் நிலையத்தில் தெரிவிக்குமாறு புசி கேட்டுக் கொண்டார்.
தகவல் உள்ள பொதுமக்கள், புக்கிட் அமானின் பணமோசடி மற்றும் பயங்கரவாத தடுப்புப் பிரிவைச் சேர்ந்த காவல் துறை அதிகாரி (சுப்ரிடெண்டன்) பூ வேய் மின் (03-26101402) அல்லது துணை சுப்ரிடெண்டன் அல்பாணி ஹம்சா (019-2412826) ஆகியோரைத் தொடர்புக் கொள்ளலாம்.