சென்னை: பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் துணிச்சல் மிக்க சுதந்திரப் போராட்ட வீராங்கனையாக நடித்துள்ள திரைப்படம் மணிகர்ணிகா. இத்திரைப்படத்தினை இயக்குனர் ராதா கிருஷ்ணா இயக்கியுள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி எல்லா திரையரங்குகளிலும் தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் இத்திரைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
இத்திரைப்படத்தில், கங்கனா ரணாவத், ஜான்சி ராணி லட்சுமிபாயின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். நாளை (சனிக்கிழமை) இந்தியாவின் குடியரசு தினம் கொண்டாடப்பட இருக்கும் வேளையில், இன்று (ஐனவரி 25) இத்திரைப்படத்தினை வெளியிட்டுள்ளனர்.
ஜான்சி ராணியின் இயற்பெயர் மணிகர்ணிகா. இவர், 1857-ஆம் ஆண்டு இந்திய விடுதலைப் போரில் முக்கியப் பங்காற்றினார். தனது 29-வது வயதிலேயே ஆங்கிலேயருக்கு எதிராகப் போரிட்டு வீர மரணம் அடைந்தார்.
இப்படத்திற்கு மேலும் வலு கொடுக்கும் விதமாக, பாகுபலி படங்களின் கதாசிரியரான விஜயேந்திர பிரசாத் இப்படத்துக்குக் கதை, திரைக்கதையை அமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் தமிழ் மொழி முன்னோட்டக் காணொளியைக் கீழே கொடுக்கப்பட்ட இணைப்பில் காணலாம்: