கனடா: அமெரிக்காவின் யுஎஸ் நியூஸ் & வேர்ல்ட் ரிப்போர்ட், பென்சில்வேனியா பல்கலைக்கழகம், மற்றும் பிஏவி கன்சல்டிங் ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில், உலகின் சிறந்த வாழ்க்கைத் தரத்தை கொண்ட நாடாக கனடா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இந்த கருத்துக் கணிப்பு, உலகம் முழுவதிலும் உள்ள 80 நாடுகளை சேர்ந்த இருபதாயிரத்திற்கும் மேற்பட்டவர்களிடம் நடத்தப்பட்டது.
இந்த பட்டியலில் சிறந்த வாழ்க்கைத் தரம் கொண்ட நாடுகளின் பட்டியலில் கனடா தொடர்ந்து நான்காவது ஆண்டாக முதலிடத்தில் இடம்பெற்றுள்ளது.
உலகின் சிறந்த நாடுகள் பட்டியலில் சுவிட்சர்லாந்து முதலிடத்திலும், ஜப்பான் இரண்டாமிடத்திலும், கனடா மூன்றாமிடத்திலும் இடம் பெற்றுள்ளன.
இந்த பட்டியலில் சிங்கப்பூர் 15-வது இடத்திலும், மலேசியா 38-வது இடத்திலும் இடம்பெற்றுள்ளன. கல்வி, குடியுரிமை, கலாசாரம், பாரம்பரியம், சுற்றுலா போன்ற பல்வேறு அளவீடுகளை மையமாகக் கொண்டு இந்த நாடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
செலவினம், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், ஊதியத்தில் பாலின சமவுரிமை, அரசியல் நிலைத்தன்மை, பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் சிறந்து விளங்குவதால் கனடா சிறந்த நாடாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என அந்த கருத்து கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.