“அப்படியென்றால் இதே போன்று கடந்த அக்டோபரில் விட்டுக் கொடுக்கப்பட்ட, மஇகாவின் மற்றொரு தொகுதியான போர்ட்டிக்சன் தொகுதி குறித்து விக்னேஸ்வரன் எதுவும் சொல்லாதது ஏன்?” என்றும் ஜசெக மத்திய செயலவை உறுப்பினரான இராமசாமி கேள்வி எழுப்பினார்.
பாரம்பரியமாகப் போட்டியிட்டு வந்த போர்ட்டிக்சன் தொகுதியையும் மஇகா கடந்த ஆண்டில் போட்டியிடாமல் அம்னோவுக்கு விட்டுக் கொடுத்தது. ஆனால், அந்தத் தொகுதியில் அம்னோவும் போட்டியிடாமல், பாஸ் கட்சி போட்டியிட்டது.
“மஇகா தலைமைத்துவம் பிரமையில் வாழுகிறது. அம்னோவுக்கு கேமரன் மலையைக் கடன் கொடுத்தோம் என்பது உண்மையிலேயே நகைச்சுவையான ஒன்றா அல்லது மஇகாவின் கௌரவத்தை மீட்டெடுக்க இவ்வாறு விக்னேஸ்வரன் கூறுகிறாரா?” என்றும் இராமசாமி நேற்று விடுத்த அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
கடந்த 3 தவணைகளாகப் போட்டியிட்டு வென்று வந்த கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியை இந்த முறை மஇகா அம்னோவுக்கு விட்டுக் கொடுத்தது. அம்னோ-தேசிய முன்னணி வேட்பாளரான ரம்லி முகமட் நோர் ஜனவரி 26 நடைபெற்ற கேமரன் மலை இடைத் தேர்தலில் அபார வெற்றியைப் பெற்றார்.