லியோன் (பிரான்ஸ்) – உணவு என்று வரும்போது மலேசியாவும் மலேசியர்களும் உலக அளவில் பிரபலமானவர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனால், சமையல் கலை என்றும் வரும்போது உலக அளவில் மலேசியர்கள் ஓரிருவர் பெயர் பதித்திருக்கிறார்களே தவிர போட்டிகளில் வெற்றி பெறுவது என்பது மிக அபூர்வமான ஒன்றாகவே இருந்து வந்தது.
அதனை முறியடிக்கும் விதமாக பிரான்ஸ் நாட்டின் லியோன் நகரில் நடைபெற்ற வோர்ல்ட் பேஸ்ட்ரி கப் 2019 (The World Pastry Cup) என்ற போட்டியில் கலந்து கொண்ட மலேசியர்கள் அந்தக் கிண்ணத்தையே வெற்றி வாகை சூடி மலேசியாவுக்கு பெருமை சேர்த்திருக்கிறார்கள்.
மலேசியாவின் சன்வே பல்கலைக் கழகத்தின் உணவுக் கலை கல்விப் பிரிவின் தலைவரான பேட்ரிக் சியாவ், மற்றும் அவரது குழுவினர்களான டான் வெய் லூன், ஒட்டோ தே, லொய் மிங் அய் ஆகியோரே அந்தக் கிண்ணத்தை வென்ற வெற்றியாளர்கள் ஆவர்.
ஜனவரி 28-ஆம் தேதி நடைபெற்ற இந்தப் போட்டியில் உலகின் 20 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் பங்கு பெற்றனர். அவர்களில் அதிக புள்ளிகளைப் பெற்று மலேசியாவே வெற்றி பெற்றது.
சாக்லேட், சீனி, ஐஸ் கட்டி ஆகியவற்றைக் கொண்டு வடிவமைப்பிலும், சுவையிலும் சிறந்த உணவுகளைத் தயாரித்து வெற்றிக் கிண்ணத்தைப் பெற்ற மலேசியக் குழுவினருக்கு தனது டுவிட்டர் பக்கத்தின் வழி வாழ்த்து தெரிவித்த பிரதமர் துன் மகாதீர், “மலேசியர்கள் உங்களின் சாதனை கண்டு பெருமைப்படுகிறார்கள். மலேசியா போலே” எனப் பதிவிட்டுள்ளார்.