கோலாலம்பூர் – முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் பாஸ் கட்சிக்கோ, அதன் தலைவர் ஹாஜி ஹாடி அவாங்கிற்கோ, சரவாக் ரிப்போர்ட் கூற்றுப்படி 90 மில்லியன் ரிங்கிட் வழங்கவில்லை – அது பொய்யான குற்றச்சாட்டு எனக் கூறியுள்ளார்.
“தற்போது நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கமே மத்திய ஆட்சியில் இருப்பதால், அத்தகைய பணம், கைமாறியதா என்பதை அவர்களால் சுலபமாகக் கண்டுபிடிக்க முடியும். பொதுத் தேர்தல் முடிந்து இந்த 9 மாதங்களில் அம்னோவின் கணக்கு வழக்குகளை நம்பிக்கைக் கூட்டணி அரசாங்க இலாகாக்கள் பரிசோதித்து வந்துள்ளன. அப்படி 90 மில்லியன் பணம் கைமாறியிருந்தால், இந்நேரம் பாஸ் கட்சியின் வங்கிக் கணக்கையோ, ஹாடி அவாங்கின் வங்கிக் கணக்கையோ அவர்கள் முடக்கியிருப்பார்கள்” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
ஹாடி அவாங் நஜிப்பிடம் இருந்து 90 மில்லியன் ரிங்கிட் பெற்றதாக சரவாக் ரிப்போர்ட் வெளியிட்டிருந்த செய்தியைத் தொடர்ந்து அந்த செய்தி பொய்யானது என ஹாடி அவாங் சரவாக் ரிப்போர்ட்டர் ஆசிரியர் ரியூகாசல் பிரவுன் மீது இலண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.
ஆனால் சில நாட்களுக்கு முன்னர் இருதரப்புகளுக்கும் இடையில் நீதிமன்றத்திற்கு வெளியே சமரசம் காணப்பட்டதைத் தொடர்ந்து அந்த வழக்கு மீட்டுக் கொள்ளப்பட்டது.
எனினும், சர்ச்சைக்குரிய அந்த கட்டுரை தொடர்ந்து சரவாக் ரிப்போர்ட் ஊடகத்தில் இடம் பெற்றிருக்கும் என்பதால், இதுகுறித்து ஹாடி அவாங்கின் நம்பகத்தன்மை குறித்து பல்வேறு தரப்புகள் சர்ச்சைகள் வெளியிட்டு வருகின்றன.
அந்தக் கட்டுரை தொடர்ந்து சரவாக் ரிப்போர்ட்டர் தளத்தில் இடம் பெற்றிருக்கும் என்பதால் தன்மீதான குற்றச்சாட்டும் களங்கமும் நீங்கிவிட்டதாக உணர்வதாக ரியூகாசல் பிரவுன் கூறியுள்ளார்.