கோலாலம்பூர் – “என் வாழ்கையில் நடந்த சில சம்பவங்கள உங்ககிட்ட சொல்ல போறேன். நீங்கள் எவ்வளவு ஆசிர்வதிக்கப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்துக்கிட்டிருக்கீங்கன்னு உணர்த்தவே நான் இதை உங்ககிட்ட சொல்கிறேன்”, என்று நாயகன் (மம்முட்டி) குரலில் துவங்குகிறது, “பேரன்பு”. கற்றது தமிழ், தங்கமீன்கள், தரமணி வரிசையில் இயக்குனர் ராமின் அடுத்த படைப்பான, பேரன்பு படத்தை பி.எல்.தேனப்பன் தயாரித்திருக்கிறார்.
கதாநாயகன் அமுதவனின் (மம்முட்டி) மனைவி , தன்னை மதிக்கும் மற்றும் நேசிக்கும் இன்னொருவருடன் செல்ல, மூளை முடக்கு நோயால் (Cerebral Palsy) பாதிக்கப்பட்ட தன் மகள் ‘பாப்பா’வை (சாதனா) அவரே பார்த்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார். குடும்பமும் சுற்றமும் பாப்பாவை ஒதுக்க, மனிதர்களின் பேரிரைச்சல் சற்று குறைவாகவே கேட்கும் பனி சூழ்ந்த காட்டுப் பிரதேசத்தில் தங்கள் வாழ்க்கையை தொடர அவர்கள் கிளம்புகின்றனர்.
துபாயில் வேலை காரணமாக பல வருடங்களாக பிரிந்தே இருந்த அப்பா மகளின் உறவில் சில போராட்டங்களுக்கு பிறகே ஒரு சிறு நெருக்கம் ஏற்படுகிறது. இந்நிலையில் தம் பார்வைக்கு இன்னும் ’பாப்பா’வாகவே இருக்கும் மகள், ’பெரியவள்’ ஆனதும் ஏற்படும் சிக்கல்களே இந்த பேரன்பு.
இயக்குனர் ராம் இயக்கிய முந்தைய திரைப்படங்களின் நாயகர்கள் எப்பொழுதும் தங்களின் வாழ்க்கையை ஒரு வித கோபத்துடனே அணுகுவார்கள். ஆனால் இதில் வரும் நாயகன் சற்று மாறுபட்டே இருக்கிறார். ஏறக்குறைய பத்து வருடங்கள் கழித்து மெகா ஸ்டார் மம்முட்டி நடிக்கும் நேரடி தமிழ்ப்படம். அவர் அமுதவன் கதாபாத்திரத்தை நுணுக்கத்துடன் ஏற்று நடித்திருக்கும் விதம், வெறுமனே அனுதாபங்களை கோராமல், அவரின் மன உணர்வுகளை மட்டும் நம்மிடம் கடத்துகிறது. இந்த பாத்திரத்திற்கு அவருக்கு நான்காவது முறையாக தேசிய விருது கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
தங்க மீன்கள் படத்தில் தனது சுட்டி நடிப்பால் பலரையும் கவர்ந்து தேசிய விருது தட்டிச்சென்ற சாதனாவுக்கு இதில் சற்று கடினமான பாத்திரம். மிகவும் உணர்ந்து நடித்திருக்கிறார்.
துணை கதாபாத்திரங்களில் அஞ்சலி, வடிவுக்கரசி, லிவிங்ஸ்டன், பாவல், ஷண்முகராஜன் என அனைவரும் அவர்களுக்கு கொடுக்கப்பட்டதை நிறைவாக செய்துள்ளனர். அரவாணி விலைமாதுவாக நடித்திருக்கும் அஞ்சலி அமீர் நல்ல தேர்வு. இயக்குனர் சமுத்திரக்கனியும் அவருக்கே உண்டான பாணியில் வடிவமைக்கப்பட்ட ஒரு சிறு பாத்திரத்தில் நடித்துள்ளார்.
அமுதவனின் மனைவி, அஞ்சலி மற்றும் மனநல குன்றியவர்களுக்கு காப்பகம் நடத்தும் ஷண்முகராஜன் என அனைவரையும் வெறும் சுயநல தீயவர்களாக காட்டாமல், அவரவர் செயல்களுக்கும் தன் பக்க நியாயங்கள் இருக்கலாம் என்று காட்டியிருப்பது இயக்குநர் ராமின் நேர்த்தியான எழுத்துக்கு எடுத்துக்காட்டு.
ஒளிப்பதிவு ‘தேனி’ ஈஸ்வர். தனிமைப்பட்டிருக்கும் அந்த குளிர் பிரதேசத்தையும், பரபரப்பு மிகுந்த மாநகரத்தையும் அதன் சூழல் ஒளியிலேயே அருமையாக படம் பிடித்திருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜாவின் பாடல்களும் பின்னணி இசையும் பலம். மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் கதைக்கேற்ப தங்களின் பங்களிப்பை அளித்திருக்கின்றனர்.
இரண்டாம் பாதியில் நீண்டுக்கொண்டே செல்லும் திரைக்கதையை சற்று சுருக்கியிருந்தால், இன்னும் ஒரு அழுத்தமான அனுபவத்தை இத்திரைப்படம் கொடுத்திருக்குமோ என்கிற எண்ணம் ஏற்படுவதை தவிர்க்கமுடியவில்லை.
குறிப்பாக, மம்முட்டியின் மகளாக வரும் பாப்பா பல இடங்களில் தனது ஒரே வகையான பழக்க வழக்கத்தையே திரும்பத் திரும்பச் செய்வது போல் காட்டியிருப்பது அலுப்பையும், போரடிப்பையும் தருகிறது. நோயின் தாக்கத்தை, அதன் பாதிப்புகளை காட்ட இயக்குநர் முயற்சி எடுக்கிறார் என்று கொண்டாலும், படம் பார்க்க வந்த இரசிகனின் பொறுமையையும் கொஞ்சம் யோசித்துப் பார்க்க வேண்டாமா?
சராசரி பொழுதுபோக்கு சினிமா பிரியர்கள், படத்தின் மையக்கருவை கேட்ட பின் சற்று தள்ளியிருக்கவே கூடும். ஆனால் அதையும் மீறி இத்திரைப்படத்திற்கு நேரம் ஒதுக்க நேரிட்டால், குறைந்தபச்சம் நாம் எவ்வளவு ஆசிர்வதிக்கப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம் என்கிற எண்ணத்தோடு திரையரங்கிலிருந்து வெளிவரலாம். இதுவரை யாரும் சொல்ல முன்வராத கதையை எடுத்து, இத்தகைய மோசமான நோயினால் தாக்கப்பட்ட வயதுக்கு வந்த மகளிர் எதிர்நோக்கும் சிக்கல்களை, எளிமையான திரைமொழியுடன் கூறிய இயக்குனருக்கும் படக்குழுவினருக்கும் பாராட்டுகள்.
இயற்கை கொடூரமானதாய் நசுக்குவதும் பேரன்புடன் அரவணைப்பதும் நாம் அதை எதிர்கொள்வதில்தான் இருக்கிறது என்பதை கோடிட்ட இயக்குனர் ராமின் கிரீடத்தில் இது இன்னொரு மயிலிறகு.