சென்னை – ஆண்டு தோறும் உலகின் பல பகுதிகளில் நடைபெற்று வந்த உலகத் தமிழ் இணைய மாநாடு, 18-வது மாநாடாக சென்னையில், அண்ணா பல்கலைக் கழகத்தில் 3 நாட்களுக்கு நடைபெறுகிறது.
உத்தமம் எனப்படும் உலகத் தமிழ் தகவல் தொழில் நுட்ப மன்றமும் அண்ணா பல்கலைக் கழகமும் இணைந்து இந்த மாநாட்டை நடத்துகின்றன. செப்டம்பர் 20 தொடங்கி 3 நாட்களுக்கு நடைபெறும் இந்த பதினெட்டாவது மாநாட்டின் மையக் கருத்தாகத்“தானியங்கிக் கருவிகளில் தமிழ்மொழிப் பயன்பாடு” (Tamil Robotics and Language Processing) என இருக்கும் என இம்மாநாட்டுக் குழுவினர் அறிவித்துள்ளனர்.
தானியங்கிக் கருவிகளில் தமிழ்மொழிப் பயன்பாடு என்ற மாநாட்டு மையக்கருத்தின் நோக்கம் தமிழ்க்கணினி பயன்பாட்டில் வன், மென்பொருள்களைக்கொண்டு குறிப்பாகக் கண், செவியில் ஊனமுற்றோருக்கு அன்றாட வாழ்க்கைச் செயல்பாடுகள், கல்வி,கற்றல், சமூகப் பணிகள் போன்றவற்றில் முழுமையாகப் பங்கேற்க வசதி செய்வதும் ஒரு நோக்கமாக இருக்கும். இத்துறையில் தொழில்நுட்ப முன்னேற்றங்களைக் குறித்துப் பலர் சிறப்புச் சொற்பொழிவும் ஆராய்ச்சிக் கட்டுரைகளும் படைக்கவுள்ளனர்.
இக்கருத்தின் அடிப்படையில் உருவாக்கப்படும் சிறந்த தமிழ்க் கணினி நிரலுக்கோ இணையப் பக்கங்களுக்கோ சிறப்புப் பரிசு வழங்கப்பட்டு மாநாட்டு அரங்கில் சிறப்பு செய்யப்படும் எனவும் உத்தமம் மற்றும் அண்ணாப் பல்கலைக்கழக மாநாட்டு அமைப்பாளர்கள் அறிவித்துள்ளனர். இது தமிழ் மொழியியல் ஆய்வையும் தமிழ்க்கணினி ஆய்வையும் அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்ல ஒரு பெரிய வாய்ப்பாக இருக்கும் எனவும் மாநாட்டுக் குழுவினர் அறிவித்தனர்.
இதற்குமுன் நடைபெற்ற தமிழ் இணைய மாநாடுகளைப்போல் இம்முறையும் தமிழ்மொழியில் கணினி பயன்பாடு மற்றும் தகவல் தொழில்நுட்பம் (IT), தமிழில் இயற்கைமொழி செயலாக்கம் (Natural Language Processing), கணினி உதவியுடன் தமி̀ழ் மொழி கற்றல் – கற்பித்தல் (Computer-Aided Learning and Teaching of Tamil), தமிழ் இணையம் உள்ளடக்கம் (Tamil Internet), தேடு பொறிகள், பெரிய தரவுகளின் பகுப்பாய்வு (Search Engines and “Big Data” analysis), மின்னூலகங்கள் (Digital Libraries), தமிழ் இணைய வளர்ச்சி மற்றும் மேலாண்மை (Tamil Web Development and Content Management) போன்ற தலைப்புகளிலும் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.
இம்மாநாட்டின் நிகழ்ச்சிகள் குழுவின் தலைவராகப் பென்சில்வேனியாப் பல்கலைக்கழகப் பேராசிரியர் வாசு அரங்கநாதன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். அண்ணாப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் இரஞ்சனி பார்த்தசாரதி, டீ.விகீதா மற்றும் ல. ஷோபா அவர்களும் இக்குழுவில் பங்குபெற்று மாநாட்டுக் கட்டுரைகளைத் தரப்படுத்தவும் சிறந்த கட்டுரைகளை நூலாக வெளியிடும் முயற்சியிலும் ஈடுபட முன்வந்துள்ளனர்.
கட்டுரைகளை www.easychair.org/conferences/?conf=”tic2019″ என்னும் இணையதளம் மூலம் வரும் ஜூன் மாதம் 1ம் திகதிக்குள் அனுப்ப வேண்டும் என மாநாட்டு நிகழ்ச்சிக் குழுவினர் அறிவித்துள்ளனர்.
இது பற்றிய மேலதிகத் தகவல்களை www.tamilinternetconference.org என்னும் இணையப் பக்கத்தில் அவ்வப்போது அறிவிக்கப்படும் எனவும் மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.