புது டெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் ஏற்பட்ட பயங்கரவாத தாக்குதலில் வீரமணரமுற்ற 44 சிஆர்பிஎப் (CRPF) வீரர்களின் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி வீர வணக்கம் செலுத்தினார். இந்தக் கொடுரத் தாக்குதல் இந்திய நாட்டை மட்டுமல்லாமல் இதர நாடுகளில் வாழும் இந்தியர்களையும் அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியது.
“உங்களை நாங்கள் தலை வணங்குகிறோம், நீங்கள் இந்தியத் தாயின் வீர மகன்கள்”
“நீங்கள் நாட்டிற்காக வாழ்ந்து, இணையற்ற வீரராக நாட்டிற்கு சேவித்தீர்கள்”
“சோகத்தில் முழ்கியிருக்கும் குடும்பங்களுடன் நாங்கள் துணையாக நிற்கிறோம்”, என நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
புல்வாமா மாவட்டத்தின் ரத்னிபோரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததும், பாதுகாப்பு படை வீரர்கள் அப்பகுதியைச் சுற்றி வளைத்தனர். பாதுகாப்பு படை வீரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையில், துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடந்ததில், பாதுகாப்பு படை வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்ததோடு, இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பின்பு, 300 கிலோ எடை கொண்ட வெடிப் பொருட்களை எஸ்சுவி ரக காரில் ஏற்றி வந்த ஜயிஷ் இ முகமது (Jaish-e-Mohammed) தீவிரவாதி சிஆர்பிஎப் வாகனத்தின் மீது மோதச் செய்ததில், 40 வீரர்கள் பலியாயினர்.
இதனைத் தொடர்ந்து, காஷ்மீர் பயங்கரவாதிகளின் மீது அதிரடி தாக்குதல்களையும், முடிவையும் எடுப்பதற்கு இராணுவத்திற்கு முழு அனுமதியை நரேந்திர மோடி வழங்கி உள்ளதாகக் கூறப்படுகிறது.