இஸ்லாமாபாத்: ஜய்ஷ்–இ–முகமட் தீவிரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசார் உயிரிழந்ததாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஆயினும், இச்செய்தி உறுதிப்படுத்தப்படாததகவல் எனக் கூறப்பட்டது.
ஜய்ஷ்–இ–முகமட் தீவிரவாத இயக்க தலைவன் மசூத் அசார் சிறுநீரக செயல் இழந்ததால் உயிரிழந்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவின. பாகிஸ்தான் தரப்பு இதனை உறுதிப்படுத்தும் வரையில், இந்திய புலனாய்வு அமைப்புகள் காத்திருக்கும் எனக் கூறப்படுகிறது.
அண்மையில் 44-க்கும் அதிகமான துணை இராணுவ படை வீரர்கள் தற்கொலை படைத் தாக்குதலால் பலியாகினர். இதற்கு ஜய்ஷ்–இ–முகமட் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இதற்கிடையே, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமட் குரேஷி, மசூத் அசாரின் உடல் நலம் குன்றியிருப்பதாகத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று, மசூத் அசார் சிறுநீரக பிரச்சனைக் காரணமாக, சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாயின. ஆயினும், அவர் நலமுடன் இருப்பதாக பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். மேலும், அவர் இராணுவ மருத்துவமனையிலிருந்து வெளியாகி, சொந்த ஊருக்குச் சென்று சிகிச்சைப் பெற்று வருவதாக பாகிஸ்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தச் செய்தியை உறுதிபடுத்தும் நடவடிக்கையில் இந்திய புலனாய்வு அமைப்புகள் ஈடுபடும் என இந்திய அரசு செய்தி வெளியிட்டுள்ளது.