சென்னை, ஏப்ரல் 2- இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் இன்று(02.04.13) தொடங்கியுள்ளது. சென்னையில் உள்ள நடிகர் சங்கம் வளாகத்தில் நடக்கும் இந்த போராட்டத்தில் நடிகர், நடிகையர் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
இலங்கையில் நடந்த இனப்படுகொலையை கண்டித்தும், இலங்கை அதிபர் ராஜபக்ஷேயை போர்குற்றவாளியாக அறிவிக்க வலியுறுத்தியும் சமீபத்தில் கல்லூரி மாணவர்கள் துவக்கி வைத்த போராட்டம் தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் ஒரு பெரும் புரட்சியாக வெடித்தது.
தொடர்ந்து இயக்குனர்கள் சங்கம் சார்பில் இயக்குனர் அமீர் தலைமையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் உண்ணாவிரதம் போராட்டம் நடந்தது.
இயக்குனர் சங்கத்தை தொடர்ந்து இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற போவதாக அறிவிக்கப்பட்டது.
இதில் அனைத்து நடிகர் சங்க உறுப்பினர்களும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் சரத்குமார் அழைப்பு விடுத்தார். அதன்படி, சென்னை அபிபுல்லா சாலையில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்கம் வளாகத்தில் இந்த உண்ணாவிரதம் போராட்டம் இன்று தொடங்கியுள்ளது.
காலை 9 மணிக்கு ஆரம்பித்த இந்த போராட்டம் மாலை 5 மணி வரை நடக்கிறது. இந்த போராட்டத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல், விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களும் பங்கேற்க உள்ளனர்.
இவர்களோடு சேர்ந்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், திரைப்பட இயக்குனர்கள் சங்கம், பெப்சி அமைப்பு, விநியோகஸ்தர்கள் சங்கம், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், சின்னத்திரை கலைஞர்கள் சங்கம் மற்றும் சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம், சின்னத்திரை இயக்குனர்கள் சங்கம், பி.ஆர்.ஓ.க்கள் சங்கம் உள்ளிட்டவர்களும் பங்கேற்க உள்ளனர். நடிகர் சங்க உண்ணாவிரத போராட்டத்தால் இன்றைய படப்பிடிப்புகள் அனைத்து ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.