Home நாடு தமிழ் மொழி இல்லாத தமிழ் விழா அறிவிப்பு – கண்டனங்கள் எழுகின்றன

தமிழ் மொழி இல்லாத தமிழ் விழா அறிவிப்பு – கண்டனங்கள் எழுகின்றன

1682
0
SHARE
Ad

கோலாலம்பூர் – தமிழ் மொழி இல்லாத தமிழ் விழா அறிவிப்பு அறிக்கை – மலேசியத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்காக வருடம் தோறும் நடத்தப்படும் மொழிப் போட்டிக்களுக்கான அறிக்கை – இவ்வாண்டும் மலாய் மொழியில் தயாரிக்கப்பட்டுள்ளது மலேசியத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு இதேபோன்று மலாய் மொழியில் திருக்குறள் மனனப் போட்டி, பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி ஆகியவற்றுக்கான தலைப்புகளும் விதிமுறைகளும் மலாய்மொழியில் இருந்தபடியால் மாணவர்களும் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களும் குழப்பத்திற்கு உள்ளான சூழலில் இவ்வாண்டும் அது தொடர்வதை ஒட்டி வல்லினம் இணைய இதழ் ஆசிரியர் ம.நவீன் (படம்) கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

தேசிய தலைமையாசிரியர் மன்றத்தால் தயாரிக்கப்படும் இந்த அறிக்கை தமிழ்ப்பள்ளிக்காகவும் அதில் பயிலும் தமிழ் மாணவர்களுக்காகவும் அவர்களின் புரிதலுக்காகவும் என்றால், அதில் ஏன் தமிழ் மொழி இல்லை என்றும் இதே அறிக்கையில் ஆங்கில மொழிக்கதைச் சொல்லும் போட்டிக்கான விதிகள் ஆங்கில மொழியிலேயே தயாரிக்கப்பட்டுள்ளதையும் நவீன் சுட்டிக்காட்டினார்.

#TamilSchoolmychoice

ம.நவீனைத் தொடர்ந்து எழுத்தாளர் இளம்பூரணனும் தனது அதிருப்தியை இடைநிலைப்பள்ளி அறிக்கைக்குத் தெரிவித்துள்ளார். அங்கும் இதே நிலை தொடர்வதையும் இதனால் மாணவர்களைத் தயார்ப்படுத்தும் ஆசிரியர்களுக்குப் பல்வேறு குழப்பங்கள் ஏற்படுவதையும் அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

தனித்த கலைச்சொற்களைக் கொண்டுள்ள தமிழின் இலக்கியப் போட்டிகள் மலாயில் அறிவிக்கப்பட்டுள்ள சூழலில் தேசிய தலைமையாசிரியர் மன்றம் எவ்வாறான மாற்று நடவடிக்கை எடுக்க உள்ளது என பல ஆசிரியர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.