
சென்னை: தமிழ் திரையுலகிற்கு மிகப்பெரிய எதிரியாக திகழ்வது தமிழ் ராக்கர்ஸ். இவர்களின் திருட்டுச் செயலை முறியடிப்பதற்கு விஷால் போன்ற திரையுலகினர் முயன்று வந்தாலும், அவர்களின் நடவடிக்கையை நிறுத்த இயலாமல் இன்றும், சுதந்திரமாக செயல்பட்டுக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, விஷால்- அனிஷா இருவரின் நிச்சயதார்த்த மேடை அலங்காரம், தமிழ் ராக்கர்ஸ்சின் சின்னம் போன்று அமைக்கப்பட்டுள்ளதாக, சமூக வலைத்தளங்களில் பலர் விஷாலுக்கும், தமிழ் ராக்கர்ஸுக்கும் தொடர்பு உண்டு என நகைத்துப் பேசி வருகின்றனர். மேலும், தமிழ் ராக்கர்ஸ், தங்களின் டுவிட்டர் பக்கத்தில் இவர்களின் படத்தினை பதிவிட்டு வாழ்த்துகள் கூறி உள்ளனர். இந்தப் பதிவின் காரணமாக இரசிகர்கள் மத்தியில் பல்வேறான கருத்துகள் பரப்பப்பட்டு வருகிறது .
தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்க தலைவர், நடிகர் சங்க பொதுச் செயலாளர் என தமிழ் திரை உலகில் மிகப்பெரிய பொறுப்புகளில் நடிகர் விஷால் இருந்து வருகின்றார். திருட்டுத் தனமாக இணையதளத்தில் திரைப் படங்களை வெளியிட்டு வரும் தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட பல இணையத் தளங்களுக்கு எதிராக, இவர் நடவடிக்கை எடுக்க கடுமையாக முயற்சி செய்து வருகிறார்.
விஷாலுக்கும் ஆந்திராவைச் சேர்ந்த தொழிலதிபரின் மகள் அனிஷா அல்லா ரெட்டிக்கும் கடந்த சனிக்கிழமை ஹைதராபாத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் நண்பர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலர் கலந்து சிறப்பித்தனர்.