பாரிஸ்: முந்தைய அரசாங்கத்தின் கீழ் ஏற்பட்ட பல்வேறு பிரச்சனைகளை தீர்ப்பதற்கு, மக்கள் பொறுமையாக இருந்து நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ டாகடர் வான் அசிசா வான் இஸ்மாயில் கூறினார்.
அவற்றை சரி செய்ய ஒரு வருட காலமோ அல்லது அதற்கும் மேற்பட்ட கால அவகாசமும் தேவைப்படலாம் என அவர் கூறினார். 61 ஆண்டு கால ஆட்சியில் தேசிய முன்னணி செய்திட்ட கோளாறுகளை சரி செய்வதற்கு கால அவகாசம் தேவைப்படுகிறது என்றார்.
“ஒரு நீண்ட காலம் சரி செய்யப்படாத பிரச்சனைகளை சரி செய்வதற்கு எங்களிடம் ‘மந்திரக் கோல்’ எதுவும் இல்லை. எதுவாக இருந்தாலும், கடின உழைப்புத் தேவை. இப்பிரச்சனை அனைத்து மலேசியர்களாலும் சரிசெய்யப்பட வேண்டியது” என அவர் கூறினார்.
இம்மாதிரியான சூழலில், மலேசியா ஒரு பன்முக நாடு என்பதை யாரும் மறந்து விடக்கூடாது என்றும், பிற இனங்களுக்கு எதிராக எந்தவிதமான பொறாமை மற்றும் பாரபட்சமும் இருக்கக்கூடாது எனவும் டாக்டர் வான் அசிசா கேட்டுக் கொண்டார்.