ஸ்கூடாய்: கடந்த 14-வது பொதுத் தேர்தலிலிருந்து, இந்நாட்டில் அரசியல் ரீதியலான பல்வேறு விவகாரங்கள் இன மற்றும் மத சம்பந்தமான பிரச்சினைகளையும், மலாய்க்காரர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் நிலைப்பாட்டையும் மையப்படுத்தியுள்ளது என முன்னாள் நிதி அமைச்சர் டாயிம் சைனுடின் கூறினார்.
நேற்று செவ்வாய்க்கிழமை தேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பேசிய அவர், இம்மாதிரியான செயல்பாடுகள் அரசியலுக்காகவே முன்னெடுக்கப்படுவதாகவும், குறிப்பிட்ட அந்த அரசியல்வாதிகளின் கருத்துகளில் ஒரு போதும் உண்மை இல்லை எனக் கூறினார். மலாய்க்காரர்களின் நிலைபாடு இந்நாட்டில் எந்நாளும் அச்சுறுத்தலுக்கு ஆளாகாது எனவும் அவர் நினைவூட்டினார்.
“மலாய்க்காரர்கள் விமர்சனரீதியாகவும் தர்க்கரீதியாகவும் சிந்திக்கிறார்களா? அவர்களின் உணர்ச்சிகளை வெளிபடுத்துவதில் மட்டுமே மும்முறமாக செயல்படுகிறார்கள். ஒது போதும், நாட்டில் நடக்கும் சூழலுக்கு யார் காரணமென்றும், இதனால் நமக்கு என்ன இலாபமென்றும் கேள்வி கேட்டதில்லை” என அவர் சாடினார்.
“மலாய் தலைவர்களிடையே அதிகபடியான ஊழல் மற்றும் ஆணவத் தன்மை நிறைந்திருக்கும் போது, அதனைக் குறித்து ஏன் மலாய்க்காரர்கள் கேள்விகள் எழுப்பவதை தவிர்க்கிறார்கள்? உலகமே நம்மை பற்றி கேவலமாய் பேசியது. அதை பற்றி எல்லாம் நாம் கவலைப்படவில்லை. ஆனால், இன்று நிலைமை தலைகீழாய் போய் கொண்டிருக்கிறது. ” என அவர் கூறினார்.
சிந்திக்கக் கூடிய தலைமுறையை நாம் உருவாக்க வேண்டும். தவறுகள் நடந்தால் அவற்றை எதிர்த்து கேள்விகள் கேட்கப்பட வேண்டும் என அவர் கூறினார். அதனை விடுத்து, பொறுப்பற்ற அரசியல்வாதிகளின் இனம் மற்றும் மத ரீதியிலான ஏமாற்று வேலைகளால் ஏமாந்து விடக்கூடாது என அவர் எச்சரித்தார்.