கோலாலம்பூர்: பொருள் சேவை வரி (ஜிஎஸ்டி) மற்றும் வருமான வரி ஆகியவற்றிற்கான மொத்தப் பணம் 7.9 பில்லியன் ரிங்கிட் இதுவரையிலும் திரும்ப வழங்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்தார்.
2019-ஆம் ஆண்டுக்கான ஜனவரி மற்றும் பிப்ரவரி 28-ஆம் தேதி வரையிலும், 3.9 பில்லியன் ரிங்கிட் வருமான வரியும், 4 பில்லியன் ரிங்கிட் பொருள் சேவைவரியும் திரும்பச் செலுத்தப்பட்டுள்ளது என அவர் கூறினார்.
38,104 நிறுவனங்களுக்கும், 37,672 நிறுவனம் இல்லாத உரிமையாளர்களுக்கும் வருமான வரி மீண்டும் செலுத்தப்பட்டது என அவர் குறிப்பிட்டார்.
சுமார் 54,603 பொருள் சேவை வரியுடன் தங்களை பதிவுச் செய்துக் கொண்ட நிறுவனங்களுக்கு சுங்கத் துறை 4 பில்லியன் ரிங்கிட் பணத்தை இதுவரையிலும் செலுத்தி உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.