கோலாலம்பூர்: வருமான வரியைச் செலுத்தாத முன்னாள் அமைச்சர், துணை அமைச்சர்களை மட்டுமல்லாமல், தற்போதைய அமைச்சர்களையும் உள்நாட்டு வருமான வரி வாரியம் (எல்எச்டிஎன்) கண்காணித்து வரும் என பிரதமர் தெரிவித்தார். அவ்வகையில், வருமான வரியை சரியாக செலுத்தாத அமைச்சர்கள் மீது அந்த அமைப்பு நடவடிக்கை எடுப்பதில் அரசாங்கம் தலையிடாது எனவும் பிரதமர் கூறினார்.
“இதில் சவுதியிலிருந்து பெற்றதாகக் கூறப்படும் 2.6 பில்லியன் ரிங்கிட் பணமும் அடங்கும்” என பிரதமர் கூறினார். அதற்காக, நஜிப்பை மட்டும் குறி வைத்து அரசாங்கம் இவ்வாறு செயல்படுகிறது என எண்ண வேண்டாமென்றும் அவர் குறிப்பிட்டார்.
நஜிப் ஆட்சியின் போது, 10 ஆண்டுகளாக வருமான வரியைச் செலுத்தாதவர்களுக்கு திரட்டப்பட்ட பெரும் வரியை முந்தைய அரசாங்கம் சுமத்தி இருந்ததைச் சுட்டிக் காட்டிய பிரதமர், அவ்வாறு செய்வது சரியான ஒன்றாக அமையாது எனக் கூறினார்.
2017-ஆம் ஆண்டில், ஒரு சில தனிநபர்களையும், வணிகர்களையும் குறி வைத்து அப்போதைய அரசாங்கமும், உள்நாட்டு வருமான வரி வாரியமும் அநியாயமாக செயல்பட்டதை பிரதமர் நினைவுக்கூர்ந்தார். அந்த செயல்முறை சட்டத்திற்கு எதிரானது என அவர் தெரிவித்தார்.