ஈப்போ: தேசிய முன்னணி ஆட்சியின் போதிலிருந்தே தொடரும், இந்திராகாந்தியின் மகள் பிரச்சனைக்கு, நம்பிக்கைக் கூட்டணி அரசு வந்தாலாவது ஒரு தாயின் துயரம் துடைக்கப்படும் என காத்திருந்தவர்களுக்கு பெருத்த ஏமாற்றமே ஏற்பட்டுள்ளது.
சிறுவர் சிறுமியரின் ஒரு தலைப்பட்சமாக மதமாற்றம் செய்யும் விவகாரம் தொடர்பிலான திருமணம் மற்றும் மணமுறிவு சீர்திருத்த சட்டத்தில் திருத்தம் செய்ய இயலாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. பொதுத் தேர்தலுக்கு முன்பதாக இந்திராகாந்தியின் வழக்கினை ஒரு பகடக்காயாக பயன்படுத்திய நம்பிக்கைக் கூட்டணித் தலைவர்களின் குரலோசையும் அடங்கி விட்டது.
அமைச்சர் பதவியை வகித்து வருவதால், அதற்கான நேரமில்லாமல் போகிறது எனக் கூறும் அமைச்சர் ஒரு பக்கம், அமைச்சரவையில் ஒன்றுக்கு நான்கு இந்திய அமைச்சர்கள் இருந்தும், ஒருவருக்குக் கூட, இந்திராகாந்தின் பிரச்சனையில் கைக்கொடுக்க வேண்டுமென்ற எண்ணம் வராதது ஏன்?
இந்த அறிவிப்பினால் தாம் பெருத்த ஏமாற்றம் அடைந்துள்ளதாக இந்திராகாந்தி தெரிவித்துள்ளார். நம்பிக்கைக் கூட்டணி அரசு தனது வாக்குறுதியை நிறைவேற்றத் தவறி விட்டது என தெரிவித்தார்.
மேலும் கூறிய அவர், முந்தைய அரசாங்கம் போன்று நம்பிக்கைக் கூட்டணி நடந்துக் கொள்ளக் கூடாது எனக் கூறியுள்ளார்.
இதற்கிடையே, இந்திராகாந்தியின் மூன்று பிள்ளைகள் ஒரு தலைப்பட்சமாக மதம் மாற்றப்பட்டது செல்லாது என கடந்தாண்டு கூட்டரசு நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. அவர்களில் பிரன்னா டிக்ஸாவை அவரது தகப்பனார் முகமட் ரிட்சுவான் கடத்திக் கொண்டு சென்றதால், இதுநாள் வரையிலும் அவரைத் தேடிக் கண்டுபிடிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல் துறையினர் குறிப்பிட்டுள்ளர். பிரசன்னா டிக்ஸா மீண்டும் மீட்டுக் கொண்டு வரப்படுவாரா இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.