சென்னை, ஏப்ரல் 3- தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் காலை 11 மணி முதல் சென்னையில் நடைபெற்ற உண்ணாவிரதம் மாலை 5 மணிக்கு நிறைவு பெற்றது.
தென்னிந்திய நடிகர் சங்க உண்ணாவிரத அரங்கில் ஈழத்தமிழருக்கு ஆதரவாக 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இலங்கை தமிழர்களுக்கு பாதுகாப்பான வாழ்வை உறுதி செய்யுமாறு தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கை மீது பொருளாதார தடை மற்றும் சர்வதேச விசாரணை கோரியும் நடிகர் சங்கம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நடிகர் சங்கத்தின் தீர்மானங்களை சங்க தலைவர் சரத்குமார் வாசித்தார். உண்ணாவிரதத்தை சட்டக்கல்லூரி மாணவர் தனசேகரன் மற்றும் லயோலா கல்லூரி மாணவர் ஜான் பிரிட்டோ ஆகியோர் பழச்சாறு தந்து நிறைவு செய்து வைத்தனர்.
இலங்கை இனப்போரால் பாதித்தோருக்கு மறுவாழ்வு அளிக்க கோரி நடிகர்கள் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ரஜினி,கமலஹாசன், அஜீத், சரத்குமார், சூர்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இலங்கை தமிழர் பிரச்னைக்காக தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் சென்னை ஹபிபுல்லா சாலையில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதற்காக 160 அடி நீளம், 60 அடி அகலத்தில் சாமியானா பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. காலை 9 மணிக்கு நடிகர் சங்க தலைவர் சரத்குமார் தலைமை தாங்கி உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார்.
இதில் ரஜினி, அஜீத், சிவகுமார், சத்யராஜ், சூர்யா, கார்த்தி, தனுஷ், ராதாரவி, வாகை சந்திரசேகர், கருணாஸ், சார்லி, விஜயகுமார், மன்சூர் அலிகான், கே.பாக்யராஜ், பாண்டியராஜன், பிருத்வி, அருண் விஜய், மனோபாலா, கே.ராஜன், எம்.எஸ்.பாஸ்கர், வி.எஸ்.ராகவன், ராஜேஷ், ஹரிகுமார், ஜி.சேகரன், உதய்கிரண், சரவணன், டெல்லி கணேஷ், தியாகராஜன், தியாகு, ஆனந்தராஜ், நிழல்கள் ரவி, எஸ்.வி.சேகர், ‘தலைவாசல்‘ விஜய், அபிஷேக், நடிகைகள் தேவயானி, தன்ஷிகா, நளினி, சத்யப்ரியா, ‘பசிÕ சத்யா, கும்தாஜ் உள்ளிட்ட பலரும் மற்றும் பிலிம்சேம்பர், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் சங்கத்தினர், பெப்சி மற்றும் சின்னத்திரை நடிகர், நடிகைகள் கலந்துகொண்டனர்.
ஆஸ்திரேலியாவில் ‘தலைவா’ படப்பிடிப்பில் இருக்கும் விஜய், நடிகர் சங்க தலைவர் சரத்குமாருக்கு உண்ணாவிரதத்துக்கான ஆதரவு கடிதம் அனுப்பி இருந்தார். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. போராட்டத்தையொட்டி படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன.