கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்க்கை கடத்த திட்டமிட்டக் காரணத்திற்காக மூன்று ஆடவர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இரண்டுமுன்னாள்மலேசியஇராணுவ வீரர்களுக்கு எட்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும்,இந்தோனிசிய ஆடவர் ஒருவருக்கும் 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. வன்முறையைத்தூண்டும்சதிமுயற்சிகளில் ஈடுபட்டதாகக் கூறி அவர்கள் மீது வழக்குத் தொடுக்கப்பட்டு நேற்று திங்கட்கிழமைமேல்முறையீட்டுநீதிமன்றம் இந்த தண்டனைகளை விதித்தது.
நீதிபதி வெர்னான் ஓங் லாம் கியாட், சாபிடின் முகமட் டியா மற்றும் ஹாஸ் சானா மெஹாட் கொண்ட நீதிபதிகள் குழு, அவர்கள் கைது செய்யப்பட்ட தேதியிலிருந்து இந்த தண்டனைகள் அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். இம்மூவரும், கடந்த 2015-ஆம் ஆண்டு ஏப்ரல் 5-ஆம் தேதியில் கைது செய்யப்பட்டனர்.
உயர்நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட ஆதாரங்கள் படி, இம்மூவரும் டாயிஸ் போராளியின் மகன் ஒருவரிடம் முன்னாள் பிரதமரை கடத்தும் முயற்சிக்காக பல முறை பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது. மேலும், முன்னாள் துணைப் பிரதமர் அகமட் சாஹிட் ஹமிடி, முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஹிஷாமுடின் துன் ஹுசைன் மற்றும் முன்னாள் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கைரி ஜமாலுடின் ஆகியோரும் இவர்களின் இலக்காக இருந்தனர்.
முன்னாள் டாயிஸ் போராளியின் மகனான, அபு டாவுட் முராட் ஹாலிமுடின் 12 ஆண்டுகள் சிறைத்தண்டையை எதிர்கொண்டு வருகிறார். அவரது தந்தையான முராட் ஹாலிமுட்டின் ஹசானுக்கு 18 ஆண்டுகள் சிறைத் தண்டனைகள் விதிகப்பட்டன. ஆயினும், கடந்த 2017-ஆம் ஆண்டு இருதய சிக்கலினால் அவர் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.