‘தெறி’ மற்றும் ‘மெர்சல்’ படத்தின் வெற்றியை அடுத்து தற்போது விஜய் மற்றும் அட்லியின் கூட்டணி, இந்தப் படத்தை உருவாக்கி வருகிறது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். மேலும் படத்தில் கதிர், யோகிபாபு டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து படம் எடுக்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் கதை தன்னுடையது என குறும்பட இயக்குநர் கே.பி.செல்வா குறிப்பிட்டுள்ளார்.
தாம் பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து கதையை தயார் செய்து வைத்திருந்ததாகவும், அதனை டிரீம் வாரியர் பிக்சர் மற்றும் ஒய் நாட் ஸ்டூடியோ நிறுவனத்திடமும் கூறியிந்ததாகக் கூறினார். ஆனால், தற்போது இந்தக் கதையை அட்லி விஜய்யை வைத்து எடுப்பதாக தெரிந்து அதிர்ந்து போனதாக அவர் தெரிவித்தார்.
இதையடுத்து, திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் முறையிட்டதாகவும், சங்கத்தில் ஆறு மாதத்திற்கு மேல் உறுப்பினர்களாக இல்லாதவர்கள் கதை திருட்டு என புகார் தெரிவிக்க முடியாது என தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.
இந்நிலையில் படக்கதை குறித்து அட்லியின் மேலாளர் மற்றும் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தலைமைத் தயாரிப்பாளர் இந்த விவகாரத்தைப் பெரிது படுத்த வேண்டாம் எனக் கேட்டு கைவிட்டுவிடக் கூறியதாக அவர் தெரிவித்தார்.