Home நாடு மெட்ரிகுலேஷனுக்கு விண்ணப்பித்து இடம் கிடைக்காதவர்கள் மித்ராவை நாடலாம்!

மெட்ரிகுலேஷனுக்கு விண்ணப்பித்து இடம் கிடைக்காதவர்கள் மித்ராவை நாடலாம்!

2067
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மெட்ரிகுலேஷன் கல்லூரிக்கு விண்ணப்பித்தும் வாய்ப்புகள் கிடைக்காத மாணவர்கள் மித்ராவைத் தொடர்புக் கொள்ளலாம் என நேற்று செவ்வாய்க்கிழமை அவ்வமைப்பு செய்தி வெளியிட்டிருந்தது.

2019-ஆம் ஆண்டுக்கான மெட்ரிகுலேஷன் கல்லூரிக்கு விண்ணப்பித்த சிறந்த மதிப்பெண்களைப் பெற்றிருந்த மாணவர்களுக்கும் இடம் கிடைக்காததை மலேசிய நண்பன் நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அதனை அடுத்து, நாடு தழுவிய அளவில் இந்தியர்களின் ஆதங்கம் சமூகப் பக்கங்களில் வெளிப்பட ஆரம்பித்தது.

முன்னாள் அரசாங்கம் கொடுப்பதாக இருந்த 2,200 இடங்களும் கிடைக்குமா, அல்லது இந்தியர்களின் நம்பிக்கைக்கு, நம்பிக்கைக் கூட்டணி அரசு பெருத்த ஏமாற்றத்தை அளிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மத்தியில் நான்கு இந்திய அமைச்சர்கள் இருந்தும் இந்த விவகாரத்தில் தீர்வு எடுப்பதற்கு திணறும் போக்கினை மக்கள் கண்டித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

கடந்த 14-வது பொதுத் தேர்தலின் போது, 2,200 மெட்ரிகுலேஷன் இடங்கள் கொடுக்கப்படும் என முன்னாள் பிரதமர் நஜிப் தெரிவித்திருந்தார். ஆனால், தற்போது எவ்வளவு இடங்கள் கிடைக்கப்பெற்றுள்ளது என்பது தெரியவில்லை என மக்கள் கருத்துரைத்து வருகின்றனர்.

இதற்கிடையே, மெட்ரிகுலேஷன் வகுப்பில் சேர வாய்ப்பு கிடைத்த மாணவர்களின் விவரங்களை கல்வி அமைச்சு வெளியிட வேண்டும் என பேராக் மாநில தமிழ்ப்பள்ளி மீட்புக் குழு இயக்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து கருத்துரைத்த, பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் வி.சிவகுமார், கல்வி அமைச்சின் இந்த நிலை தமக்கு பெருத்த ஏமாற்றத்தை அளிப்பதாகக் கூறினார். இந்த விவகாரத்தில் கல்வி அமைச்சு தீவிரமாக இருந்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

அவரது இப்பதிலுக்கு, சமூக ஊடகங்களில் மக்கள் ஏமாற்றத்துடன் பதில் கூறி உள்ளனர்.

அதாவது, அரசாங்கத்தில் அங்கத்துவம் வகிக்கும் தலைவர்களே ஏமாற்றம அடைந்துள்ளார்கள் எனக் குறிப்பிடுவது, இந்தியர்களின் நம்பிக்கையை சீர்குலைத்த வண்ணம் இருப்பதாக கூறியுள்ளனர்.

மெட்ரிகுலேஷன் வகுப்புகளுக்கு விண்ணபித்தும் இடம் கிடைக்காத மாணவர்கள், மெட்ரிகுலேஷன் முறையீட்டு பற்றுச்சீட்டு, எஸ்பிஎம் தேர்வு முடிவு, புறப்பாட நடவடிக்கை மதிப்பெண் ஆகியவற்றை வாட்ஸ் அப் புலனத்தின் வழி (011-5653 4347) அனுப்பக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மேலும், mitra.jpm@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு இந்த விவரங்களை அனுப்பவும் செய்யலாம் என மித்ரா குறிப்பிட்டுள்ளது.