கோலாலம்பூர்: எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் செண்டெரியான் பெர்ஹாட் நிதி மோசடி தொடர்பான குற்றச்சாட்டுக்கள் சம்பந்தப்பட்ட நஜிப் ரசாக் மீதான எட்டாவது நாள் விசாரணை இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.26 மணியளவில் தொடங்கியது.
முன்னாள் பிரதமரான நஜிப், 42 மில்லியன் ரிங்கிட் உள்ளடக்கிய நிதி மோசடி மற்றும் அதிகார துஷ்பிரயோகம் காரணமாக மூன்று குற்றச்சாட்டுக்களை எதிர் நோக்கியுள்ளார். கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதியான முகமட் நாஸ்லான் முகமட் கசாலியின் முன்னிலையில் நஜிப்பின் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2014 மற்றும் 2015-ஆம் ஆண்டில், 50 மில்லியன் ரிங்கிட் பெறுமானமுள்ள பணம் கண்டிங்கான் மெந்தாரி செண்டெரியான் பெர்ஹாட் வங்கிக் கணக்கிலிருந்து, ஏஷான் பெர்டானா வங்கிக் கணக்கிற்குச் செலுத்தப்பட்டது என அபின் பேங்கின் வங்கி அதிகாரியான, 53 வயது, ரோசையா முகமட் ரொஸ்லி கூறினார்.
எஸ்ஆர்சி இண்டர்னேஷனல் செண்டெரியான் பெர்ஹாட் நிறுவனத்தின் துணை நிறுவனமான கண்டிங்கான் மெந்தாரி நிறுவனம் சமூக விவகாரங்களின் பொறுப்புகளை ஏற்று செயல்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் கூறிய ரோசையா, கடந்த 2015-ஆம் ஆண்டு பிப்ரவரி 5-ஆம் தேதி, குறிப்பிடப்பட்ட அதே நிறுவனத்திற்கு, கண்டிங்கான் பெஸ்தாரி நிறுவனம் 5 மில்லியன் ரிங்கிட் பணத்தை செலுத்தி உள்ளது எனக் குறிப்பிட்டார். அதனைத் தொடர்ந்து மேலும் ஒரு 5 மில்லியன் ரிங்கிட் 2015-ஆம் ஆண்டு பிப்ரவரி 6-ஆம் தேதி செலுத்தப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.