Home இந்தியா நினைவிட ஆய்வுக்குப் பிறகு இராஜ இராஜ சோழனுக்கு சிலை எழுப்பப்படுமா?

நினைவிட ஆய்வுக்குப் பிறகு இராஜ இராஜ சோழனுக்கு சிலை எழுப்பப்படுமா?

1065
0
SHARE
Ad

தஞ்சாவூர்: தமிழர்களுக்கு பெருமை சேர்த்த பேரரசர்களில் இராஜ இராஜ சோழனும் ஒருவர். குறிப்பாக, தமிழர் நாகரிகம் சோழ அரசர்களால் மிகப் பெரிய உயர்ந்த நிலையை அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, தஞ்சாவூர் மாவட்டம் உடையாளூரில், இராஜ இராஜ சோழன் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தொல்லியல் துறை சார்பில் நடத்திய ஆய்வு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, இந்த விவகாரம் குறித்து, இராமநாதபுரத்தை சேர்ந்த வழக்கறிஞர் திருமுருகன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.

#TamilSchoolmychoice

சோழ அரசின் பேரரசன் முதலாம் இராஜ இராஜ சோழன் கிபி 985 முதல் கிபி 1014 வரையில் ஆட்சி புரிந்தவர். இவரது இயற்பெயர் அருள்மொழிவர்மன். இவரது ஆட்சி காலத்தில் நுண்கலை, கட்டிடக்கலை, சமயம், இலக்கியம் என அனைத்து துறைகளும் சிறந்து விளங்கின. இதற்கான சான்றாக திகழ்வது தஞ்சை பெரிய கோயில், ஸ்ரீரங்கம் கோயில் உள்ளிட்டவை.

இவருடைய ஆட்சியும், கட்டிடக்கலையும் இன்றளவும் உலக அளவில் அனைவராலும் பாரட்டப்பட்டு வருகிறது. இவ்வாறு சிறப்பான முறையில் வாழ்ந்து ஆட்சி புரிந்த இவருடைய சமாதி தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உடையாளூர் என்ற கிராமத்தில் எவ்வித பராமரிப்புமின்றி சிதைந்து கிடக்கையில் திருமுருகன் அதனை நன்முறையில் பராமரித்து, உலகிற்கே இவரின் பெருமையை பறைசாற்றும் வகையில் இவருக்கு சிலை ஒன்றினை எழுப்பும் எண்ணத்தில் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.

குறிப்பிட்ட இந்த கிராமத்தை சுற்றி ஆரியப்படை, சோழப்பட்டை, சோழமாளிகை, பட்டீஸ்வரம் போன்ற கிராமங்கள் உள்ளன. இங்கு இவரது ஆட்சிகாலத்தில் கட்டப்பட்ட அரண்மனை மற்றும் மாளிகைகளும் உள்ளன. இப்பகுதியில் முறையாக ஆய்வுகளை  தொல்லியல் துறை செய்து, அவரின் பெருமை நிலை நாட்ட முற்பட வேண்டும் என அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

அவ்வகையில், அரசுத் தரப்பில் உயர்நீதிமன்றம் உத்தரவின் படி இரண்டு நாட்கள் உடையாளூர் பகுதியில் இராச இராச சோழன் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தொல்லியல் துறை சார்பாக நவீன தொழில்நுட்ப உதவியுடன் ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன.

அந்த ஆய்வுகள் அனைத்தும் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், சோதனையின் முடிவுகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.