சென்னை: முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் இந்த விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இது வரையிலும் சுமார் 150-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு விட்டதாகவும், இப்போது திடீரென விசாரணையைத் தடை செய்வது குறித்து சந்தேகம் எழுந்துள்ளதாக சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.
முன்னதாக, அப்போலோ மருத்துவர்களை விசாரிக்க ஆணையம் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், மருத்துவர்களிடம் விசாரணை நடத்த தனியாக 21 மருத்துவர்கள் மற்றும் சிறப்பு நிபுணர்கள் கொண்ட குழுவை அமைக்க வேண்டும் என்று மருத்துவமனை சார்பில் நிபந்தனை வைக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மருத்துவமனை சார்பில் வழக்கும் தொடுக்கப்பட்டிருந்தது. வழக்கு விசாரணையின் போது ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று மருத்துவமனை தரப்பில் கோரப்பட்டது.
ஆயினும், விசாரணை முடியும் தருவாயில் இருக்கும் போது, அவ்வாறான குழுவை அமைக்க முடியாது என ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், விசாரணை ஆணையத்திற்கு தடை விதிக்க முடியாது என்று உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து மருத்துவமனை தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதனை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம், ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு இடைக்கால தடை விதித்துள்ளது.