சென்னை: ஏப்ரல் 30-ஆம் தேதி மற்றும் மே 1-ஆம் தேதியில் தமிழகத்தில் வடக்கு கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்யக் கூடும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் பானி புயலாக உருவாகும் வேளையில், தற்போது இது சென்னைக்கு தென்கிழக்கே 1,210 கிமீ தொலைவில் மையம் கொண்டிருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது.
தொடர்ந்து இந்த புயலானது இலங்கை கடல் பகுதியில் வடமேற்காக நகர்ந்து, 30-ஆம் தேதி மாலை வட தமிழகம்– தெற்கு ஆந்திரா கடற்கரை பகுதியை நெருங்கும் எனவும் 30-ஆம் தேதி புயலின்போது 120 முதல் 145 கிமீ வேகத்தில் காற்று வீசும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மீனவர்கள் இன்று சனிக்கிழமை முதல் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளுக்கும், 28-ஆம் தேதியிலிருந்து 30-ஆம் தேதி வரையிலும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.