Home நாடு மலேசிய எழுத்தாளர் ம.நவீனுக்கு கனடா, தமிழ் இலக்கியத் தோட்டத்தின் சிறப்பு விருது

மலேசிய எழுத்தாளர் ம.நவீனுக்கு கனடா, தமிழ் இலக்கியத் தோட்டத்தின் சிறப்பு விருது

1602
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நமது நாட்டின் குறிப்பிடத்தக்க இலக்கிய ஆளுமைகளில் ஒருவரும், ‘வல்லினம்’ இதழ் நிறுவனருமான ம.நவீனுக்கு கனடா, தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2018ஆம் ஆண்டுக்கான சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. புனைவு மற்றும் இலக்கியச் செயல்பாடுகளில் அவரது பங்களிப்புக்காக இந்தச் சிறப்பு விருது வழக்கப்படுவதாக கனடாவின் தமிழ் இலக்கியத் தோட்டம் அறிவித்துள்ளது.

மலேசியத் தமிழ் நவீன இலக்கியத்தில் கடந்த 14 ஆண்டுகளாக தனது தீவிர செயல்பாடுகளால் தொடர்ந்து பங்காற்றி வரும் நவீனுக்கு ஜூன் 9-இல் கனடா டொரோன்டோவில் அமைந்துள்ள கிராண்ட் சின்னாமோன் மாநாட்டு மண்டபத்தில் (Grand Cinnamon Convention Centre) இந்தச் சிறப்பு விருது (1000 கனடியன் டாலர் மதிப்பு) அளிக்கப்படவுள்ளதாக இலக்கியத் தோட்டத்தின் அறிவிப்பு தெரிவித்தது.

சிறுகதை, கவிதை, கட்டுரைகள், நேர்காணல்கள், பத்தி எழுத்து எனப் படைப்பிலக்கியத்தில் தொடர்ச்சியாகச் செயல்பட்டுவரும் ம.நவீன், வல்லினம் இலக்கியக் குழு மூலம் சிற்றிதழ்கள், ஆய்விதழ்கள், ஆவணப்பட இயக்கம், பயிலரங்குகள், கண்காட்சிகள், நூல் பதிப்பு, வீதி நாடகம் போன்ற கலை, இலக்கியம் தொடர்பான பல முயற்சிகளை மலேசிய நவீனத் தமிழ் இலக்கியச் சூழலில் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார்.

#TamilSchoolmychoice

தமிழ் உலகின் மதிப்புமிக்க இயல் விருதை வழங்கி வரும் கனடா தமிழ் இலக்கியத்தோட்டத்தின் இந்தச் சிறப்பு விருது தமிழ் மொழி, இலக்கியத் துறையில் குறிப்பிடத்தக்க பங்காற்றியவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

ஈழத்தின் மதிப்புமிக்க கல்வியாளர், இலக்கிய விமர்சகர் ஏ.ஜே.கனகரத்னம். தமிழ் மொழி,  இலக்கிய ஆய்வாளரான சிகாகோ பல்கலைக்கழக பேராசிரியர் ஷாசா எபெலிங் (Sascha Ebeling), தமிழ் இலக்கியத் தோட்டத்திற்குப் பேராதரவு அளித்துவரும் தமிழ் மொழி ஆர்வலர்களான திரு & திருமதி ஆசீர்வாதம், சோ.பத்மநாபன், முனைவர் ப்ரெண்டா பெக், தமிழறிஞர், கல்வியாளர் டாக்டர் டேவிட் ஷூல்மன்  இரா. இளங்குமரன் மறைந்த கவிஞர் செழியன், தி. ஞானசேகரன், முனைவர் நிக்கோலப்பிள்ளை சேவியர் ஆகியோருக்கு இதுவரையில் இந்தச் சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள், விமர்சகர்கள், கொடையாளர்கள் ஆகியவர்களின் ஆதரவுடன் 2001ஆம் ஆண்டு டொரோன்டோவில்  ஆரம்பிக்கப்பட்ட  இந்த இயக்கம் தமிழ் மொழி, இலக்கிய வளர்ச்சிக்காகப் பங்காற்றி வருகிறது. தமிழ், ஆங்கில நூல்களின் மொழிபெயர்ப்பு, அரிய தமிழ் நூல்களை மீள் பதிப்பு செய்வது, தமிழ் பயிலரங்குகள் நடத்துவது, நூலகங்களுக்கு இலவசமாக தமிழ் நூல்கள் அளிப்பது, தமிழ் சேவையாளர்களுக்கு விருதுகள் வழங்குவது என பல்வேறு நடவடிக்கைகள் மூலமாக தமிழ் மொழியின் வளர்ச்சியில் இவ்வியக்கம் பங்காற்றுகிறது. இயல் விருதுடன், சிறந்த தமிழ்ப் படைப்புகளுக்கான விருதுகள், சிறப்பு விருது போன்றவற்றையும் கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கிவருகிறது.