புது டில்லி: ஒடிசா கோபால்பூர் மற்றும் சந்திரபாலிக்கு இடையே பூரிக்கு அருகில் பானி புயல் கரையை கடக்கத் தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவான பானி புயல் தற்போது ஒடிசாவை நோக்கி நகர்ந்து இன்று வெள்ளிக்கிழமை உள்நாட்டு நேரப்படி பிற்பகல் 3 மணியளவில் பூரி அருகே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆயினும், தற்போது கரையை கடக்கத் தொடங்கியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஒடிசாவில் கோபால்பூர் மற்றும் சந்திரபாலிக்கு இடையே பூரிக்கு அருகில் காலை 8 மணி முதல் 11 மணி வரையில் கரையை கடக்கும் நிகழ்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மணிக்கு 17 கிமீ வேகத்தில் இப்புயலானது கரையைக் கடக்கிறது. கரையை கடக்கும் பொழுது மணிக்கு 200 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.