புத்ரா ஜெயா, ஏப்ரல் 3- 13ஆம் பொதுத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில் இன்று புதன்கிழமை காலை 11.30 மணியளவில் மலேசிய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
இன்று காலையில் பேரரசர் துவாங்கு அப்துல் ஹலிம் முஹாசாம் ஷாவை சந்தித்து அவரிடம் நாடாளுமன்றம் கலைப்பதற்கான சம்மதம் பெற்றவுடன் நாடாளுமன்றத்தைக் கலைத்ததாக நஜிப் துன் ரசாக் அறிவித்தார்.
தொலைக்காட்சி மற்றும் வானொலிகளில் அவரது அறிவிப்பு நேரடி ஒளிப்பரப்பு செய்யப்பட்டது.
இதன் பின்னர் வேட்பாளர்கள் மனு தாக்கல் தேதியையும், பொதுத் தேர்தல் நடப்பதற்கான தேதியையும் தேர்தல் ஆணையம் அறிவிக்கும்.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர், 13ஆவது பொதுத் தேர்தல் 60 நாட்களில் நடத்தப்பட வேண்டும். அதாவது ஜூன் 2க்குள் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
அதே சமயம், சரவாக் மாநிலத்தைத் தவிர்த்து எல்லா மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களும் ஒரே சமயத்தில் நடத்தப்படும். இதற்கு காரணம் சரவாக் மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தல் கடந்த 2011ஆம் ஆண்டு நடந்தது.